அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 சட்டசபைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து தேமுதிக கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்ரப்பட்டு வந்தது.
ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்காததால் தனித்து போட்டியிடுவதா இல்லை வேறு கூட்டணிக்கு செல்வதா என்ற யோசனையில் தேமுதிக இருந்தது. இந்த நிலையில் பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து, தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் தங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டது. ஆனால் இதை அதிமுக மறுத்தது. பின்னர் 2ஆவது நாளாக நடந்த பேச்சுவார்த்தையில் 25 தொகுதிகளாக தேமுதிக குறைத்துக் கொண்டது.
ஆனால் அதிமுகவோ 15 முதல் 18 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்றே கூறியது. இதையடுத்து 3ஆவது கட்ட பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவோ 21 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் தர வேண்டும் என கோரியது. ராஜ்யசபா எம்பி பதவியை தருவதில் சிக்கல் இல்லை. ஆனால் 21 தொகுதிகள் என்பது மிகவும் அதிகம் என்றது திமுக.
இந்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக நிர்வாகிகள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் லீலா பேலஸுற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தேமுதிக ஒப்புக் கொள்ளுமா என்பது தெரியவில்லை.