தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 3ஆவது அணியாக களமிறங்கியிருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகம், வேட்பாளர்களுக்கான நேர்காணல் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
முதன் முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார். அதேபோல் மீண்டும் முதல்வர் அரியணையை கைப்பற்ற வேண்டுமென எடப்பாடி பழனிசாமி, தன் மொத்த திறமையை இறக்கி அரசியல் களத்தில் பணியாற்றிவருகிறார்.
இதற்காக அதிமுக மத்திய பாஜக அரசின் உதவியுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அவ்வப்போது தமிழகம் வரும் பாஜக தலைவர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 7-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். இங்கு வரும் அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி, நாகர்கோவில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
காலை 10 மணிக்கு சுசீந்திரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர், 10.45 மணிக்கு வெற்றிக்கொடியேந்தி வெல்வோம் என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் தொடங்கி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மதியம் 12 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார்.