தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.6 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் அறிவிப்பை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன.
அதிமுக சாா்பில் போட்டியிட 8,250 போ் மனுக்களை அளித்துள்ளனா். அவர்களுக்கு நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதே போல , திமுகவில் 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மார்ச் 2 முதல் மார்ச் 6-ம் தேதி வரை, விருப்ப மனு அளித்தவர்களை அழைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறார்கள். இன்றுடன் நேர்காணல் முடிகிறது.
நேர்காணல் முடிந்து, வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைமை கழகத்தால் கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்த வேட்பாளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம் பெறுமா என நேர்காணல் சென்று வந்த கட்சி நிர்வாகிகள் ஆவலில் காத்து கிடக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதனும், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவும், விளாத்திகுளம் தொகுதியில் சின்னப்பனும் என மூன்று சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உறுதியாகிவிட்டது.
அதே போல, திமுகவிலும் தூத்துக்குடி தொகுதியில் கீதாஜீவனும், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனும், ஓட்டப்பிடாரத்தில் சண்முகையாவும் என மூன்று சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உறுதியாகிவிட்டது.
அது போக, அதிமுக வில் மீதமுள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட இருப்பதால், கூட்டணி தொகுதி பங்கீடு முடிவுக்கு அடுத்தே இத்தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் போட்டியாளர்களின் நிலைமை தெரியவரக்கூடும்.
அது போலத்தான், திமுகலும் மீதமுள்ள ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று தொகுதிகளில், விளாத்திகுளம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் போட்டியிடவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால், அதைதவிர்த்து பிற ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இருப்பதால், கூட்டணி தொகுதி பங்கீடு முடிவுக்கு அடுத்தே இத்தொகுதிகளில் திமுக வேட்பாளர் போட்டியாளர்களின் நிலைமை தெரியவரக்கூடும்.
இதனால், அதிமுகவில் திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர் போட்டியாளர்களும், திமுகவில் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஆகிய இரண்டு தொகுதி வேட்பாளர் போட்டியாளர்களும் நகம் கடித்து கொண்டு திக்திக் நிமிடங்களை கடந்து வருகின்றனர்.