சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் அதிமுகவில் நேற்று ஒரே கட்டமாக வேட்பாளர்கள் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். இன்றைய ஆலோசனைக்குப் பிறகு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்திய நேர்காணல் நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம்தேதி நடைபெறுகிறது. எனவே, தமிழகம், கேரளா, புதுச்சேரியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த 27ஆம்தேதி முதல் மார்ச் 3ஆம்தேதி வரை விருப்பமனு பெறப்பட்டது.
முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், தற்போதைய அமைச்சர்கள் அவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளிலும், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். இவை அனைத்தும் நேற்று முடிவடைந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் சேர்த்து சுமார் 8,174 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 8000 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், விருப்ப மனுதாக்கல் செய்தவர்களுக்கு 3 மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்காணல் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மனச்சோர்வடைய வேண்டாம் என்று கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தலில் வெற்றி பெற பாடுபடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் அதிமுகவில் நேற்று ஒரே கட்டமாக வேட்பாளர்கள் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.