சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள 5மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை, தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மோடியின் படங்களை அகற்ற 72 மணிநேர கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங் களுக்கான சட்டசபைத் தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறு கின்றன. இம்மாநிலங்களுக்கான தேர் தல் தேதிகளை கடந்த 26ஆம் தேதி தேர்தல் ஆணையர் அறிவித்தார். அன்று முதலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் 234 தொகுதிகள், கேரளா- 140 தொகுதிகள், புதுவை-30 தொகுதிகள் ஆகி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாகவும், மேலும் 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்திற்கு மொத்தம் 8 கட்டங்களாகவும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் தேர்தல் ஆணைய அதிகாரியை சந்தித்து, பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் பல்வேறு விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. எனவே அந்த விளம்பர பேனர்களை அகற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 1000 புகார்கள் வந்தன. அவற்றில் 450 புகார்கள் உண்மை என்பதை அறிந்த தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்தது. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இருக்கும் பிரதமர் மோடி புகைப்படம் பதித்த விளம்பரங்களை அகற்ற மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்.
இதனிடையே சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கள் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தேர்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டதாகவும். இதுகுறித்து தேர்தல் நடக்கும் மாநில தேர்தல் ஆணையர்கள் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.