• vilasalnews@gmail.com

விளம்பரமாடல் அரசு; பாசாங்கு வேலை... திமுக அரசின் பட்ஜெட்டை விட்டு விளாசிய தவெக விஜய்!

  • Share on

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலை என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடுயைமாக விமர்சித்துள்ளார்.


தமிழ்நாடு அரசின் 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-


தமிழக நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும், அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை என்று கூறியுள்ள விஜய், காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகள் தான் எனவும் சாடியுள்ளார். மேலும், புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள விஜய், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப்போகின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்? கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை, வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும் என்றும் போட்டு தாக்கியுள்ளார் விஜய்.


முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்பு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள விஜய். விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது? பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் விளாசியுள்ளார்.


ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆனது என்றும்; மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்பதெல்லாம் வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் போலித்தனமே அதிகம் உள்ளது. விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது என்றும் இந்த விளம்பர மாடல் அரசு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது என்றும் கடுமையாக விஜய் விமர்சித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட் தான் இவர்கள்இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு என்றும் விஜய் விமர்சித்துள்ளார்.வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றும் தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.


  • Share on

தவெக மாவட்ட செயலாளர்கள் இறுதி பட்டியல்... நாளை வெளியாகிறது!!

வீட்டுச் சிறையில் பாஜகவினர்... தொடை நடுங்கி திமுக அரசு - பரபரப்பாகும் அரசியல் களம்!

  • Share on