சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்ற சொல்தான் இன்றைய பேசு பொருள், இதில் அதிமுக தலைமைக்கு தற்காலிக மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் உண்மையான அரசியல் ஆட்டத்தை சசிகலா இனிமேல்தான் அடித்து ஆடப் போகிறார்.
சசிகலா எப்போதுமே நேரடியான அரசியல்வாதி கிடையாது, அவர் அதிமுக என்கிற கட்சியை திரைமறைவு பின்னனியில் இருந்து இயக்கிய இயக்குநர் ஆவார், அவரால் இயக்குநர் என்கிற பதவியை மட்டுமே செவ்வனே செய்ய முடியும், அவர் பின்னால் இருந்து இயக்குவதில் ஊறித் திளைத்தவர் சுமார் 30 ஆண்டு காலமாக இந்தப் பணியை மட்டுமே செய்து வந்திருக்கிறார்.
சசிகலாவால் இரட்டை இலை என்கிற சின்னத்திற்கு எதிராக வாக்கு கேட்க அவர் மனம் ஒப்பவில்லை, அவரால் நீண்ட நாட்களுக்கு தலைவர் வேடமிட்டு நடிக்க முடியாது, அதிமுகவினரே அவர் மீது விமர்சன சாட்டைகளை சொடுக்கும் போது அதை தாங்குகிற மனநிலையை சசிகலா ஏற்றுக் கொள்ளவில்லை, சசிகலாவை பார்ப்பதற்காக பல நாட்கள் காத்திருந்து பார்த்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருந்து கொண்டு இவரை எக்காளமிட்டு பேசுகிற சூழலை தவிர்க்கவே விரும்புகிறார்.
முதலைக்கு தண்ணீரில் இருந்தால்தான் பலம் என்பதை போல , சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வேடத்தை கலைத்து விட்டு மீண்டும் தனது இடத்திற்கே திரும்புகிறார், இந்த இடம் தான் சசிகலாவை ஆழமாக யோசிக்க வைக்கும், இவரால் திறைமறைவு வேலைகளை மட்டுமே திறம்பட செய்ய முடியும்.
எப்போதுமே ஒரு முடிவு எடுக்கும் போது அந்த முடிவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சசிகலாவிற்கு நிச்சயம் தெரியும், சசிகலாவின் முடிவிற்கு காலமும், சூழ்நிலையும், ஒத்துழைக்கும் போது அவர் மீண்டும் திறைமறைவில் பலமான அதிகார சக்தியாக அவதரிப்பார்.