
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 95 மாவட்டங்களுக்கு ஐந்து கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அக்கட்சியின் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட மாவட்ட செயலாளர் பட்டியலை நாளை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேரடியாக விஜய் ஆலோசனை நடத்திய பிறகு விஜய் வெளியிடுகிறார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் கட்சியை அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு, தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
அது போக, மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் 5 கட்டங்களாக 95 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிப்பை விஜய் வெளியிட்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஐந்தாம் கட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்ற நிலையில், மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இறுதி கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 25 மாவட்ட நிர்வாகிகளை நேரில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அவர்கள் நாளை காலை 11 மணிக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தலைமை நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி அதற்குப் பிறகு மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்கின்றனர்.