அரசியலில் இருந்து சசிகலா விலகியதை அடுத்து அவரின் விலகல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பேட்டி அளித்துள்ளார். சசிகலா முடிவு குறித்து தினகரன் விளக்கமாக பேசி உள்ளார்.
அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். சிறை தண்டனை முடித்து திரும்பி வந்த சசிகலா தமிழக அரசியலில் அதிரடி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் சசிகலாவின் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் இருந்து சசிகலா விலகியதை அடுத்து டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். சசிகலா அரசியலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து தினகரன் விளக்கி உள்ளார். தினகரன் தனது பேட்டியில், சசிகலாவுக்கு இதில் எந்த பின்னடைவும் இல்லை.
சசிகலா அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துவிட்டார். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சசிகலா விலகிவிட்டார். அதிமுகவில் இணைந்து இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்பதால் விலகிவிட்டார்.
ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சசிகலா முடிவு செய்துவிட்டார். அதிமுகவிலேயே எங்களை ஒதுக்கிவிட்டனர். நிர்பந்தம் காரணம் என்று சொல்ல மாட்டேன். சசிகலா மாற்றத்தை ஏற்படுத்த போகிறார் என்று சொல்லவில்லை. இந்த முடிவு அவரின் சொந்த முடிவு.
அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர்தான் ஆனால் அதிமுகவை சசிகலா மீட்க போகிறார் என்று நானும் சொல்லவில்லை, சசிகலாவும் சொல்லவில்லை. இதற்கு மேல் இதில் சொல்ல ஒன்றுமில்லை. சசிகலாவின் அறிக்கை குறித்து இனிதான் ஆலோசனை நடத்த வேண்டும். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று சசிகலா கருதுகிறார் .
சசிகலாவின் அறிக்கையை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரைமணி நேரமாக சசிகலாவிடம் வலியுறுத்தினேன். சசிகலா முடிவு சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது; எனினும் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடும்.
சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லி இருக்கிறார். அவர் அறிக்கையை இப்போதுதான் பார்த்து இருக்கிறோம். இதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இந்த அறிக்கைக்கு காரணமும் என்ன என்று ஆலோசனை செய்வோம், என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.