
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைக்க விடுக்கப்பட்டுள்ள விளம்பரம் தற்போது பெரும் டிரென்ட்டாக மாறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் நடத்தி வருகிறார்கள்.
முன்பெல்லாம் பொதுக்கூட்டத்திற்கு யார் சிறப்பு பேச்சாளர் வருகிறார் என்பதை அறிந்து, அவர்களது பேச்சை ரசித்து கேட்பதற்காக மக்கள் தானாகவே வருவார்கள். அதே போல பொதுமக்களை வர வைக்க சினிமா நட்சத்திரங்களை கூட்டத்தில் பேச வைத்தார்கள். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள் பொதுக்கூட்டம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து இடம் பிடித்து அமர்ந்திருந்த கடந்த கால வரலாறுகளும் உண்டு.
ஆனால், இப்போதெல்லாம் பொதுமக்களை கூட்டத்திற்கு அழைத்து செல்ல வாகன ஏற்பாடு, ஆண்களுக்கு குவாட்டர், பெண்களுக்கு பிரியாணி அது போக தலைக்கு ரூ.200, 300 கொடுத்தால் மட்டுமே அரசியல் கூட்டங்களுக்கு பொதுமக்களை வரவைக்க முடியும் என்ற நிலை உருவாகி போனது.
இத்தகைய சூழலில் தான், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து ஆட்களை வரவழைக்கும் முயற்சி நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நாளை மார்ச் 5 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை அதிமுக நடத்துகிறது.
இதை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், கே.சி.கருப்பன் உள்ளிட்டோர் நடத்துகிறார்கள். இந்த கூட்டத்திற்கு பொதுமக்களை அதிகளவில் திரட்ட புதிய யுத்தியை கையாண்டுள்ளனர். அதாவது, ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3 நபர்களுக்கு தங்க நாணயம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 300 பேருக்கு வீட்டு உபயோக பொருட்களான மிக்ஸி, குக்கர், கிரைண்டர், பீரோ, ஃபேன், சில்வர் பாத்திரங்கள் குலுக்கல் முறையில் பரிசு பொருட்களாக வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே சிறப்பு பரிசு வழங்கப்படும் என அதிமுக சார்பில் ஊத்துக்குளி முழுவதும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.