
திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு, புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன்னிட்டு கட்சி அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரித்து புதிய நிர்வாகிகளை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நியமித்து வருகிறார்.
சமீபத்தில் நான்கு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நான்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.
இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. கட்சியின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலுவுடன், பொலிவுடன் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கை தொடரும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், மூத்த மாவட்ட செயலாளர்கள் வசமுள்ள சட்டசபை தொகுதிகளும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
குறிப்பாக சென்னை மாவட்டங்களில் 16 தொகுதிகளுக்குமாக 6 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரிடம் உள்ள சட்டசபைத் தொகுதிகளை பிரித்து கூடுதலாக இரண்டு பேருக்கு மாவட்ட செயலாளர்கள் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் தற்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.எல்.ஏ., சுந்தர் என இரண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள தொகுதிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளும் அமைச்சர் காந்தியிடம் உள்ளன. எனவே இந்த மாவட்டத்திற்கு மேலும் ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகள் உள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன் மாவட்ட செயலாளராக உள்ளனர். இங்கும் இரு மாவட்ட செயலாளர்கள் கூடுதலாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.
சேலத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளது. தற்போது எம்பி செல்வகணபதி, அமைச்சர் ராஜேந்திரன், சிவலிங்கம் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். புதிதாக இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. தற்போது எம்பி ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் மாவட்ட செயலாளராக உள்ளனர். கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபைத் தொகுதிகள் உள்ளது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். கூடுதலாக ஒரு மாவட்டச் செயலாளர் இடம்பெற உள்ளார்.
அதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாவட்ட செயலாளரும், கோவை மாவட்டத்தில் இரண்டு மாவட்ட செயலாளரும் கூடுதலாக நியமிக்க வாய்ப்பு உள்ளது என திமுக உட் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி என 3 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதன் மாவட்டச் செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் உள்ளார். திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் என 3 சட்டசபை தொகுதிகள் கொண்ட தெற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இதில், வடக்கு, தெற்கு மாவட்டங்களில் இருந்து தலா ஒரு தொகுதிகள் பிரித்தெடுத்து மூன்றாவது மாவட்டமாக பிரிக்க வாய்ப்புள்ளது. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி அல்லது கோவில்பட்டி, விளாத்திகுளம் என இரண்டு தொகுதிகள் கொண்ட புதிய மாவட்டம் உருவாக வாய்ப்புள்ளது.
அதில், மூன்றாவது மாவட்ட செயலாளர் பதவியை பெற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகிய இருவரும் கடுமையாக முயற்ச்சித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே தொகுதி மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர்கள். அதே வேளையில் மக்கள் பணி, அரசியல் பணி என இரண்டிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 4ல் திமுகவினரும், ஒன்று திமுக கூட்டணி கட்சியினரும் எம்எல்ஏக்களாக உள்ளனர். இத்தகைய சூழலில் தூத்துக்குடி மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சண்முகையா அல்லது மார்க்கண்டேயன் என மூன்று மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமையால் நியமிக்கப்படும் பட்சத்தில், தூத்துக்குடி மாவட்டம் அசைக்க முடியாத திமுகவின் எஃகு கோட்டையாக மாறும். ஒரு எம்பி, 6 எம்எல்ஏக்கள் என அனைவரும் திமுகவினரே தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பார்கள் என்று கணிக்கின்றனர் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள்.