
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) என்ற ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
ஆகவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விசிக தொல் திருமாவளவன், மதிமுக துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதல்வர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை இரட்டை கொலை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த குழுவில் எம்எல்ஏக்கள் எழிலன், நீலமேகம், பூமிநாதன் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
அத்திக்கடவு அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெறவில்லை என அதிருப்தி தெரிவித்து செங்கோட்டையன் அவர் மாவட்டத்தில் நடந்த விழாவையே புறக்கணித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன் டெல்லியில் அதிமுக தலைமை அலுவலகம் திறப்பு விழாவிலும் மூத்த தலைவர் என்ற முறையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார்.
இதற்கிடையே தான் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.