• vilasalnews@gmail.com

என்னை சோதிக்காதீங்க.. பொதுக்கூட்டத்தில் கடுகடுத்த செங்கோட்டையன்!

  • Share on

இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் கடந்த 9ம் தேதி நடந்த பாராட்டு விழாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை எழுப்பி இருப்பதோடு அரசியல் களத்திலும் விவாதப் பொருளாக மாறியது.


எங்களை உருவாக்கிய தலைவர்​களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா படங்கள் அழைப்​பிதழிலும், மேடை​யிலும் இல்லாத​தால், என் உணர்​வுகளை வெளிப்​படுத்​தும் வகையில் இந்த விழா​வில் பங்கேற்​க​வில்லை என்று செங்​கோட்​டையன் விளக்கம் அளித்​துள்ளார். அதோடு, சென்னையில் நடந்த டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழா நிகழ்​விலும் பங்கேற்காமல் இருந்ததால் தலைமைக்கு எதிரான தனது அதிருப்​தியை​ வெளிப்​படுத்துகிறார் செங்கோட்டையன் என்ற பேச்சும் எழத்தொடங்கியது.


அமைதியின் சொரூபமாக இருந்த செங்கோட்டையன் தனது இந்த நடவடிக்கைகள் மூலம் கட்சி தலைமைக்கு எதிராக தனது ஆவேசத்தை வெளிப்படுத்​தி​யுள்​ளாரா என்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி​யது. எம்ஜிஆர், ஜெயலலி​தாவை முன் நிறுத்தி, செங்​கோட்​டையன் எழுப்​பி​யிருக்​கும் இந்தக் குரல் பெரிய அளவில் விவாதத்தை தொடங்கி வைத்​துள்ளதாக சொல்லப்பட்டது.


ஆனால், கட்சி சார்பாக நடத்தப்பட்ட விழாவாக இல்லாததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், எடப்பாடி கே.பழனிசாமி இதுகுறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


இந்த பரபரப்பான சூழலில் ஈரோட்டில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் இன்று ( பிப்.,12 ) ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக, அவரது வீட்டில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால், இது போன்ற தகவல் பரவியதாக சொல்லப்பட்டது.


இந்நிலையில், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை என அவர் விளக்கம் அளித்தார்.


இதற்கிடையே, அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிமுக சார்பில் எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன்:-


இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் கட்சிக்காக பாடுபட்டவன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.


நான் எத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனை தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்தக் களத்தில் இருக்கிறேன் என்பதும் கூட மக்களுக்குத் தெரியும். ஏதாவது கிடைக்குமா எனத் தேடாதீர்கள். எதுவும் கிடைக்காது.


என்னை சோதிக்காதீர்கள், அதுதான் எனது வேண்டுகோள். நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த பாதை. அவர்கள் இருவரும் தான் நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் இல்லை என்றால் இன்றைக்கு இந்த இடத்தில் நான் நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது.


1977 தேர்தலில் கோபியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தேன். என்னை சத்தியமங்கலத்தில் நிற்கச் சொன்னார் எம்ஜிஆர். அங்கு காங்கிரஸ் செல்வாக்கு கொண்ட பகுதியாயிற்றே என நான் யோசித்தேபோது, எம்ஜிஆர் என்ற பெயரைச் சொல் என்றார் தலைவர் எம்ஜிஆர். அவர் சொன்னபடி வெற்றி பெற்றுக் காட்டினோம்.


எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அந்தக் குழுவினர் என்னை வந்து அழைத்தபோது அவர்களிடமும் இதைத்தான் சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை. என்னை வாழ வைத்தவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் தான் நான் கலந்து கொள்ளவில்லை அவ்வளவுதான்.


ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான். இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை. என்னைச் சோதிக்காதீர்கள். என தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த விழா மேடையில் இடம் பெற்றுள்ள பேனர் கவனம் பெற்றுள்ளது. காரணம், இந்த பேனரில் அதிமுக பொதுச் செயலாளர் கே.எடப்பாடி பழனிசாமி படத்தின் அளவுக்கு சம அளவில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்வை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பேனரில் செங்கோட்டையன் படத்தின் அளவு பெரிதாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

  • Share on

ஒருங்கிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் பொதுச்செயலாளர்.. வெளியேற்றப்படும் இபிஎஸ்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் யார்? முன்னாள் அமைச்சர் வெளியிட்ட திடீர் வீடியோ!!

  • Share on