
ஜாதி ஓட்டுகளுக்காக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, பெரியார் பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். தம்மை கூலிக்காக பெரியாரை இழிவுபடுத்துகிறார் என விமர்சித்ததற்காக கனிமொழியிடம் சீமான் டென்ஷனாக இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகள் என கனிமொழி கூறுவது அவரது அப்பாவையும் (கருணாநிதி), திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவையும் தான். நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ, எழுதி இருந்தாரோ அதை எடுத்து பேசுகிறேன்.
பெரியாரைப் பற்றி பேசும் கனிமொழி உள்ளிட்ட பெருமக்கள், பெரியார் என்ன பேசினார்? என்பதை எடுத்து பேச துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? பெரியார் யார் தெரியுமா? என கேட்கிறீர்கள். எங்களுக்குதான் தெரியவில்லை. சொல்லுங்க என்றால் சொல்லவும் மறுக்கிறீர்கள்.
பெரியாரை கருணாநிதி, அண்ணாவை விட யாராவது இழிவாகப் பேசி இருக்கிறார்களா? அம்மையார் கனிமொழி அவர்களே, நீங்கள் பேசுகிற பெரிய கூலி உங்க அப்பாதான். அப்ப உங்க அப்பாவைத்தான் எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கனிமொழி ஒரு பெரியாரிஸ்டா? அப்புறம் ஏன் மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீறு பூசி விட்டீர்கள்? நீங்கள் கடவுள் மறுப்பாளரா? உங்க கட்சி பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை என்ன? பெரியார் எங்கே ஜாதி ஒழிப்பை நிலைநாட்டி இருக்கிறார்?
தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது, தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? காரணம் என்ன? சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், விழுப்புரத்தில் போட்டியிடாமல் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? ஜாதி ஒழிப்புக்காகவா ? அங்கே ஏமாந்த பாவப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பதால்தானே. உங்களை இன்னமும் அந்த மக்கள் தன் ஜாதிக்காரன் என நம்புகிறான் பாருங்க. அந்த அளவுக்கு அந்த மக்களை பைத்தியக்கார மக்களாக்கி வைத்திருக்கிறீர்கள்?
தூத்துக்குடியில் 2 முறை ஏன் போட்டியிட்டீர்கள்? கருணாநிதி மகள் கனிமொழி எப்படி நாடாராக முடியும்? அப்ப மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் எல்லாம் நாடாரா? ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜாதி இருக்குமா? அப்புறம் எதுக்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? நீங்க பெரியார் பற்றி பேச தகுதி இருக்கிறதா? சும்மா கூலி, காலி என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு சீமான் கூறினார்.