முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தையும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கரத்தையும் உயர்த்தி பிடித்த மோடி மிக முக்கியமான விசயத்தை சசிகலா குடும்பத்தினருக்கு அறிவித்து விட்டுதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார்.
இதுநாள் வரை அமைதியாக இருந்த ஓபிஎஸ் அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறாமல் அப்படியே நடைமுறைபடுத்தும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கோவையில் பேசி இபிஎஸ் உடன் கரம் கோர்த்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்படுகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்ற குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களாகவே எழுந்து கொண்டுதான் இருக்கிறது. சசிகலா பக்கம் சாயப்போகிறார் என்றும் பரவலாக செய்திகள் உலா வந்த நிலையில்தான் கோவையில் இபிஎஸ் உடன் கரம் கோர்த்திருக்கிறார் ஓ.பிஎஸ்.
விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி, இன்று திருமணம் செய்த மணமக்கள் இருக்க வேண்டும் என்று பஞ்ச் வைத்து பேசி தான் விட்டுக்கொடுக்க தயாராகி விட்டேன் என்று தனக்கு எதிராக செய்தி பரப்பியவர்களுக்கு சொல்லி இருக்கிறார்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பே சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் தேர்தல் பிரச்சாரமா என்ற பேச்சு எழுந்தது. அடுத்த சில நாட்களிலேயே சென்னையில் இபிஎஸ், ஒபிஎஸ் இணைந்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதனையடுத்து அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றிநடை போடுவதாக இபிஎஸ் விளம்பரம் கொடுக்க பத்தாண்டு சாதனை என்று பதில் விளம்பரம் கொடுத்தார். இருவருக்கும் இடையே புகைச்சலோ என்று பலரும் பேச காரணமாக அமைந்தது இந்த விளம்பரம்தான்.
சசிகலா சிறையில் இருந்து வரும் வரை அமைதியாக இருந்த டிடிவி தினகரன், பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலாவின் சென்னை வருகைக்குப் பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் சீண்டும் விதமாகவே பேட்டி அளித்து வருகிறார். அதிமுகவை கைப்பற்றத்தான் அமமுக கட்சியை தொடங்கியுள்ளதாக கூறி வருகிறார்.
சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்த சசிகலாவோ தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். அனைவரும் ஒன்று படுவோம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் அமமுக அதிமுக இணைய வாய்ப்பே இல்லை என்றுதான் அமைச்சர்கள் பலரும் பேசி வருகின்றனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா பற்றியோ, டிடிவி தினகரன் பற்றியோ எந்த பேச்சும் பேசாமல் மவுனம் காத்து வந்தார்.
பிப்ரவரி 14ஆம் தேதியன்று பிரதமர் மோடியின் சென்னை பயணம் ஓபிஎஸ், இபிஎஸ் கரங்களை இணைய வைத்து விட்டது என்றே அரசியல் நோக்கர்கள் பேசி வருகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தாலும் நான்கு ஆண்டு காலம் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் மக்களை கவரும் விதமாகவே இருக்கிறது என்பது பலரது கருத்தாகும்.
பிரதமரிடம் பத்து நிமிடங்கள் தனியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமியும் சசிகலா, டிடிவி தினகரன் பற்றியே பேசியதாகவே தகவல் வெளியாகி வருகிறது. அந்த சந்திப்பில் ஓபிஎஸ் பங்கேற்காவிட்டாலும் அதன் சாராம்சம் அவருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாம். இதனையடுத்தே கோவையில் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்ததோடு விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று பஞ்ச் வைத்து பேசியிருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் இருவரும் இணைந்து அவர்களை ஒரு கை பார்ப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நம்பிக்கையாக கூறி வருகிறாராம் ஓபிஎஸ்.
அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் முதன் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் அதிமுக வெற்றி பெற்றால் அது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரட்டை தலைமைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும். இந்த வெற்றிக்குப் பிறகு சசிகலாவும் டிடிவி தினகரனும் கட்சிக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு அதிமுக அலுவலகத்தின் வாசலுக்கு கூட செல்ல முடியாது என்றே அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.