பெரியார் குறித்து தரக்குறைவாக பேசுகிறவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிய நிலையில், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான். ஆனால் பெரியார் சில மனிதர்களை பற்றி சொல்லியிருக்கிறார். அதனை 1962 ஆம் ஆண்டு முரசொலி பத்திரிகையில் படிக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து பேசி வரும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் பெரியாரை ஆதரித்தவர் சீமான். ஆனால் தற்போது பெரியாரை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். பெரியார் பெண் உரிமை பற்றி பேசவில்லை. பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசினார்.
மேலும் இனிமேல் பெரியார் எதிர்ப்பு தான். பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன தொடர்பு இருக்குது? தமிழ் மொழி, சங்க இலக்கியங்களை எல்லாம் பெரியார் பழித்தே தான் பேசி வந்தார். உனக்கு உடல் இச்சை வந்தது என்றால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியவர் பெரியார். பெரியாருக்கு கொள்கை என்பதே கிடையாது. அவருக்கும் சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீமான் விமர்சித்து பேசினார்.
சீமானின் இந்த பேச்சைக்கு திமுகவினர் திராவிடர் கழகம் மற்றும் பெரியாரிஸ்ட்டுகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடையே பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியிருந்தார்.
அண்ணாமலை பேசும்போது, பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை கூறினார் என்றும், எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தையும் நான் தருகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவறுப்பு வந்து விடும். எனவே பொதுவெளியில் பேச வேண்டாம். சீமான் அண்ணனை தேடி காவல்துறை வந்தால், அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும் என்றார்.
இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், "கடந்த 2 நாட்களாக பெரியாரை பற்றி அதிகமாக தரக்குறைவாக பேசுகின்றனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ‛‛பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுகிறவனின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்'' என்று சீற்றமானார். சீமான் பெயரை சொல்லாமல் அதற்கு பதில் தரும் வகையில் துரைமுருகன் விமர்சித்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெரியார் பற்றி தரக்குறைவாக பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அண்ணாமலை கூறியதாவது:
நான் பெரியாரை பற்றி தான் பேசுறேன். என் பிறப்பில், ஒரு அப்பா அம்மாக்கு தான் நான் பிறந்தேன். விவசாயம் செய்யுற அம்மா அப்பாக்கு தான் பிறந்தேன். கிராமத்தில் தான் பிறந்தேன். அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரைக்கு ஊழல் எதுவும் பண்ணதில்லை. அதிலும் சந்தேகம் இல்லை. என் வீட்டுக்கு அமலாக்கத்துறை கடப்பாறையை எடுத்துக்கொண்டு வந்து சோதனை செய்யவில்லை. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க ரெய்டுக்கு வரும் போது பையன் வந்து துபாயில் போய் இருக்கின்ற மாதிரி ஒரு பையனை நான் பெற்றெடுக்கவில்லை. இதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
இதையெல்லாம் தாண்டி, பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. அண்ணன் துரைமுருகன் பெரியாரை பற்றி பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுகிறார் என்றால், நான் சொல்லியிருப்பதை போட்டு பார்த்துக்கொள்ளட்டும். எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான். ஆனால் பெரியார் சில மனிதர்களை பற்றி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை 1962 ஆம் ஆண்டு முரசொலியில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே துரைமுருகன் 1962 ஆம் ஆண்டு வெளியான முரசொலியை வாங்கி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.