• vilasalnews@gmail.com

கலைஞர் சிலை வைத்திட முழு ஆதரவு அளித்த அதிமுக! கடுப்பில் பாஜக!

  • Share on

தமிழகத்தில் முதல் முறையாக பொது இடத்தில் அமைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைக்கப்பட்டு, அதனை திறந்து வைத்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், அதற்கு காரணமாக இருந்த மாவட்ட கழக செயலாளர்கள், வழக்கறிஞர் அணியினருக்கு தமது பாராட்டை சிலை திறப்பு விழாவில் தெரிவித்து உள்ளதோடு அவர்களை அழைத்தும் பாராட்டி உள்ளார்.

ஆனால் இந்த சிலை திறக்கப் படுவதற்கு தெரிந்தோ தெரியாமலோ தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து இருக்கிறது அதிமுக அரசு.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் எம்ஜிஆர் சிலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி சத்தமில்லாமல் ஜெயலலிதா சிலையை வைத்ததை காரணம் காட்டி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் கோ.தளபதி நீதிமன்றம் சென்ற போது, இது தொடர்பாக 8 வாரத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை, தமக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் கலைஞரின் சிலை சிம்மக்கல் பகுதியில் அமைந்திட எந்த ஒரு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்தது.

இதனை, வெளிப்படையாகவே அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் வெளிப்படையாகவே, திமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கலைஞர் சிலை வைத்திட எடப்பாடி அரசு அனுமதி அளித்துள்ளது என கூறி வந்தனர்.

அதன் படியே சிலை வைப்பதற்கான அனுமதி மதுரை மாவட்ட ஆட்சியரின் முடிவை தாண்டி சென்னை வரை சென்று மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியை பெற்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்த திடீர் அனுமதியை எதிர்பார்த்திராத திமுக மதுரை மாநகர் நிர்வாகிகள், சிலை அமைத்திடும் பணிகளை மேற்கொண்ட போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இந்த பணிகளை நிறைவேற்றி தந்தவர் முன்னாள் அமைச்சர் எவ வேலு.

சிலையின் பீடம் தொடங்கி, சிலை எழுப்பப்பட்டது வரை அனைத்திலும் உறுதுணையாக இருந்து வென்று காட்டி இருக்கிறார் எவ.வேலு. 

மெரீனாவில் நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்கு பிறகு திமுக தலைவர் கலைஞர் நினைவிடம் அமைக்கப்பட்ட போன்று அல்லாமல், தேர்தல் காலம் நெருங்கி வருவதை தொடர்ந்து கலைஞரின் சிலை அமைந்திட அதிமுக வினரும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு அளித்துள்ளது தான் வியப்பு.

இந்த உண்மைகள் எதுவும் தெரியாமல் கலைஞரை சித்தாந்த எதிரியாக நினைத்து கொண்டு கலைஞர் சிலை அமைந்திட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி அதிமுக அரசின் ரகசிய உத்தரவுப்படி காவல்துறை யினரால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பிள்ளையும் கிள்ளி தொட்டில் ஆட்டிய கதையாக அதிமுகவினர் சிலை வைக்க ஆதரவும் அளித்து விட்டு போராட்டம் நடத்திய பாஜக கட்சியினரை கைது செய்து இருப்பது பாஜக வினரை கடுப்பாக்கி உள்ளது.

இந்த உண்மை தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் கலைஞர் சிலை அமைக்கப் பட்டதற்கு அனைத்து நிர்வாகிகளும் காரணம் என கூறி இருப்பது உட் கட்சிக்குள் விவாத பொருளாக மாறி உள்ளது.

எப்படியோ, தமிழ் சமூகத்தின் நலனுக்காக உழைத்த ஒரு தலைவர் கலைஞரின் சிலை அமைக்கப் பட்டதற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது காலத்தின் வியப்பு தான்.

  • Share on

விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் உடன் கை கோர்த்த ஓபிஎஸ்

  • Share on