இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது. "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்திருந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயர் உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட, அவர்கள் குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த இருந்தார். 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடத்திலேயே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார்.
தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கடந்த முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்றைய சட்டப்பேரவை அலுவல் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிந்தது.