தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
அதில், 'கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு' என்ற வாசகத்துடன் கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியார் துணையோடு, திமுக கட்சிக் கொடியுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நோக்கி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ கனிமொழி செல்வது போல அந்த சுவரொட்டியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், Way to 2026 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டிகள் கனிமொழியை வாழ்த்துவதாக மட்டுமல்லாது கட்சியிலும், ஆட்சியிலும் அவருக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் அமைந்திருப்பதால் உட்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் அங்கம் வகிக்கும் வகையில் வாய்ப்புகள் வந்து சேராதா? என்ற அவரது ஆதரவாளர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாகவும் இந்த சுவரொட்டிகள் அமைந்திருக்கின்றன. சுவரொட்டிகள் கவனம் பெற வேண்டும் என கனிமொழி ஆதரவாளர்களின் இத்தகைய போஸ்டர்கள் கனிமொழிக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கவே அமையும் என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.
அதே போல, மற்றொரு போஸ்டரில் வகுப்பறையில் கனிமொழி அரசியல் பாடம் நடத்துவது போலவும், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பள்ளி சீருடைகள் அணிந்து வகுப்பறையில் அமர்ந்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
எங்கள் தலைவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கும் அளவிற்கு அவர் பெரிய அரசியல் சாணக்கியர் அல்ல. எங்களுக்கு எல்லாம் அரசியல் பாடும் எடுக்கும் ஆசிரியர் கனிமொழி, தனக்கு பின்னால் வந்த உதயநிதி அமைச்சர், துணை முதல்வர் எப்படி ஆனார், நம்மால் ஏன் வரமுடியவில்லை? அதற்கு வழி என்ன? என்ற பாடத்தை முதலில் உங்கள் கனிமொழி படித்து தேர்ச்சி பெறட்டும். அதற்கு அப்புறம் எங்களுக்கு பாடம் எடுக்க வரட்டும் என்று போஸ்டர் ஒட்டிய கனிமொழி ஆதரவாளர்களுக்கு எதிராக பதிலடி கொடுத்து கடுகடுக்கும் எதிர்கட்சியினர், தங்களது சுவரொட்டிகள் மூலம் கனிமொழியின் கவனத்தை பெறுவதற்காக அவரது ஆதரவாளர்கள் செய்யும் இதுபோன்ற நாகரீகமற்ற அரசியல் செயலை கனிமொழி ரசிக்கிறாரா? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.
எதிர்கட்சிகளை தூற்றி வாழ்த்தினாலும் சரி, தனிப்பட்ட முறையில் புகழ்ந்து வாழ்த்தினாலும் சரி, ஆர்வகோளாறில் ஆதரவாளர்களின் புகழ்ச்சி போஸ்டர்கள் கடைசியில் கனிமொழிக்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவே அமைகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.