முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு, அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்து உள்ளார்.
இந்நிலையில்,இன்று (17.2.2021) தூததுக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.
இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும், எம்எல்ஏக்கள் சண்முகநாதன், சின்னப்பன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை, முன்னாள் எம்பிக்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், மற்றும் அதிகாரிகள், அதிமுகவினர் முதல் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் புறப்பட்டு முதல் அமைச்சர் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சண்முகநாதன் எம்எல்ஏ விற்கு காலில் காயம்
விமானநிலையத்தில் உள்ள முதல்வரை வரவேற்பதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு நெருக்கடியில், கண்ணாடி உடைந்து, சண்முகநாதன் எம்எல்ஏ விற்கு காலில் காயம் ஏற்பட்டது.