அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் மோடிக்கு ‘கண்டனம்’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இல்லை என்று திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் இன்று (டிசம்பர் 15) குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைத்தாலும், பாஜக உடனான அதிமுக தொடர்பை அவர்களது பொதுக்குழு தீர்மானங்களே காட்டிக் கொடுத்து விட்டது.
திமுக ஆட்சி மீது கண்டனம்..கண்டனம்…என கண்டனத்தை கங்கணம் கட்டி ஆடும் எடப்பாடி அவர்களே, ‘வெள்ள நிவாரணத்திற்கு கிள்ளிக் கூட தராமல்.. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என ஜனநாயகத்தை வேட்டையாடத் துடிக்கிற, நச்சுத்திட்டமாம் டங்ஸ்டன் சுரங்கத்தின் மூலம் மதுரை மண்ணை அழிக்கத் துடிக்கிற மோடிக்கு ‘கண்டனம்’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த தெம்பு, திராணி இல்லாமல், வலியுறுத்தல்..வலியுறுத்தல் என்று வாஞ்சையாய் தடவிக் கொடுத்திருக்கிறார். எடப்பாடி உங்கள் மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க முடியவில்லை.
மோடியைப் பார்த்து ஒரு கண்டனம் தெரிவிக்கக்கூட முடியாத நீங்கள், திமுக ஆட்சியைப் பற்றி விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது? உங்கள் தீர்மானங்களே பாஜக உடனான உங்கள் தொடர்பை அம்மணமாக்கி விட்டன” என்று தெரிவித்துள்ளார்.