அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திருமாவளவன் குறித்த பேச்சுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வைத்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்த தகவல்கள் இடம் பெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா பேசும் போது, "விசிக தலைவர் திருமாவளவன் இங்கு இல்லை. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக தவெக தலைவர் விஜய் உருவெடுத்து இருக்கிறார். திருமா அண்ணனின் கனவு என்ன?தலித்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் வெளியிடுவது என்பதுதான்" என்றார்.
பின்னர் பேசிய நடிகரும் தவெக தலைவருமான விஜய், "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகளால் அழுத்தம் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன், அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என்றார்.
ஆனால், இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், ” நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு திமுக காரணம் அல்ல. திமுக அழுத்தம் கொடுத்ததாக நடிகர் விஜய் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக ஒன்றும் பலவீனமாக இல்லை” என தெரிவித்தார்.
இதற்கு இடையே திமுக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜய் பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள. அதன் ஒருபகுதியாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவான ஆளூர் ஷா நவாஸ், "ஒரு கூத்தாடி எப்படி திருமாவளவனை பற்றி பேசலாம் என கொந்தளித்தார். அப்போதே அதே விவாதத்தில் பங்கேற்று இருந்த தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தநிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, சினிமா துறையினரை கூத்தாடி என கேவலமாக பேசியதாக சினிமா துறையினரும், தமிழக வெற்றி கழகத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமாவளவனே ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நிலையில் அவரையும் ஆளூர் ஷாநவாஸ் விமர்சிக்கிறாரா என கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி,” கூத்தாடி..எவ்வளவு திமிர் இவருக்கு? இவர் வகிக்கும் கட்சி தலைவரே ஒரு படத்துல கூத்தாடி வேஷம் போட்டவரு தான். இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷானவாஸ் அவர்கள். இது திரை நடிகர்களை மட்டுமல்ல, நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவு படுத்தும் வார்த்தை" என கூறியுள்ளார்.
பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த், "தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு முதுகெலும்பு ஒன்று இருந்தால் ஆளூர் ஷாநாவாஸின்இன் இந்த பேச்சை கண்டிக்கும். கூத்தாடுவது ஒன்றும் இழி செயல் அல்ல. கூத்தாடிகள் இல்லையேல் இங்கே பலருக்கு மகிழ்ச்சி இல்லை என பதிவிட்டுள்ளார்.
திருமாவளவனை அரசியல்வாதியாக தான் பலருக்கும் தெரியும். ஆனால், மின்சாரம், என்னை பார் யோகம் வரும், அன்புத்தோழி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மின்சாரம் படத்தில் தமிழ்நாடு முதல்வராக திருமாவளவன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.