முடிந்தால் நீ தூத்துக்குடிக்கு வந்து மேடை போட்டு பேசிப் பார் என பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் ஒருமையில் பேசி சவால் விட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அரசியல் தொடர்பான உயர்படிப்பு படிப்பதற்காக கடந்த 3 மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்திற்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை ஒரிரு தினங்களுக்கு முன்பு தமிழகம் திரும்பினார்.
பின்னர், கோவை வந்த அவர், கொடிசியா வளாகத்தில், "விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை முதல்முறையாக பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது:-
மக்களுக்கு பயன்படும் அரசியலை யாரும் பேசுவது கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், காப்பரை ஏற்றுமதி செய்த நாடு, இன்று அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என்ற செய்தி எத்தனை தமிழக ஊடகத்தில் வந்துள்ளது? அந்த நிறுவனத்தை மூடியதால், இந்தியா மேலை நாட்டில் இருந்து காப்பர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புவி அரசியலில் இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல் என்ன என்பதை சாமானிய மக்கள் புரிந்து கொண்டால், இதை வைத்து அரசியல் செய்ய முடியாது. என்று பேசினார்.
இந்த நிலையில் தான், திமுக இளைஞரணி துணைச்செயலாளரும், வழக்கறிஞருமான தூத்துக்குடி ஜோயல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்டெர்லைட் குறித்து பேசிய வீடியோவுடன் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்
எம் மண்ணின் மைந்தர்களை சுட்டுக்கொல்ல காரணமான ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் வெட்கங்கெட்ட அண்ணாமலையே...
நீ லண்டன் சென்றது வேதாந்தாவுடன் பேரம் பேச தானா?
ஆலையை விரட்டி அடிக்க இரத்தம் சிந்தியவர்கள் மீது ஆணையாக சொல்கிறேன்..
இனி ஒருநாளும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தூத்துக்குடி மண்ணில் கால் வைக்க விட மாட்டோம்.
மக்கள் விரோத
கார்ப்பரேட் கைக்கூலி அண்ணாமலையே,
முடிந்தால் நீ
தூத்துக்குடிக்கு வந்து
மேடை போட்டு பேசிப் பார்!
அப்பொழுது
வீரம் செறிந்த இந்த மண்
உனக்கு பாடம் புகட்டும் என்றும்.
https://x.com/Joel_Dmk/status/1864585334685614525?t=oWLlybX2sAP-dsmHqk_TjA&s=19
இதனால், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் ஒருமையில் பேசி சவால் விட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.