வங்கதேச இந்துக்களின் உரிமையை மீட்பதற்காக நடத்தப்படும் ஆர்பாட்டத்திற்கு, இந்து விரோத ஸ்டாலின் அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் அரசாங்கத்தால் உரிமமையற்றவர்களாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் இந்துக்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றால் 2026ல் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசியுள்ளார்.
வங்கதேச இந்துக்களின் உரிமைகளை மீட்கும் வகையிலான போராட்டம், தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்புகளும் இணைந்த வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று நடைபெற்றது. கோவை மாநகர், சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார்.
பின்னர், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது :
ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த ஆர்பாட்டத்திற்கு, இந்து விரோத ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்துக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடக்கூட தமிழகத்தில் இந்துக்களுக்கு உரிமையில்லை என்பது மிகவும் கவலைக்குரியது மட்டும் அல்ல கண்டனத்திற்கு உரியதும் ஆகும்.
இது எந்த அளவுக்கு அவமானது, இந்து விரோதமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டாலின் அரசாங்கத்தால் உரிமமையற்றவர்களாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் இந்துக்கள் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றால், 2026ல் திமுக கூட்டணி வேரோடு அழிக்கப்பட வேண்டும். தூத்துக்குடியிஸ் சங்கர ராமேஸ்வரர் கோவில் நிலத்தில் சொற்ப வாடகைக்கு திமுகவினருக்கு கோவில் இடத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவன் அங்குள்ள வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளார். இந்து கோவிலின் சொத்துகளை கொள்ளையடிக்கும் அமைப்பு திமுக. இந்துக்களுக்கு விரோதமான ஸ்டாலின் அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.