ஏழு பேர் விடுதலைக்கு 78 லட்ச ரூபாய் செலவு செய்த ஒரே கட்சி மதிமுக என மதுரையில் நடந்த தேர்தல் நிதி அளித்திடும் கூட்டத்தில் வைகோ தெரிவித்தார்.
கூற்று உடன்று மேல்வரினும் கூடிஎதிர்க்கும் ஆற்றல் அதுவே படை என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கின்ற, கழகத்தின் கண்மணிகளாகிய நீங்கள், என அரங்கம் அதிர சொல்கின்ற வைகோவின் கம்பீர குரல் மிஸ்ஸிங். உடல் நலிவுற்று அதிர கூட பேசாத தலைவரை மிகவும் கவலையோடுதான் பார்த்தார்கள் மதிமுக தொண்டர்கள்.
மதுரையில் நடந்த தேர்தல் நிதி அளித்திடும் கூட்டத்தில் பேசிய வைகோ :
கழகம் அதிகாரத்தில் இருந்தது இல்லை; அந்தப் பொறுப்பிற்கு வரும் என்ற நம்பிக்கையோடு பாடுபட வேண்டும் என்றும் சொல்வதற்கு இல்லை. இருப்பினும் கூட, நிதி திரட்ட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எல்லோரும் சொன்னபோது, ‘நிதி கிடைக்குமா?’ என நான் சந்தேகப்பட்டேன்.
இந்தக் கொரோனா காலத்தில், எந்தக் கட்சியும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிதி திரட்டவில்லை. அப்படி நிதி திரட்ட வேண்டிய தேவை, பல கட்சிகளுக்கு இல்லை. அவர்களிடம் நிதி குவிந்து இருக்கின்றது.
ஆனால், நமது இயக்கத்தில் இருக்கின்ற நீங்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வசதி குறைந்தவர்கள். இந்த இந்தக் கட்சிக்குப் பணம் கிடையாது; பதவியும் கிடையாது;
எந்த அதிகாரமும் கிடையாது. அடுத்த தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் கிடையாது; இத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதமும் கிடையாது. மிகக் குறைந்த இடங்கள் கூடக் கிடைக்கலாம்.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் பாடுபடுகின்றீர்களே, உங்களைப் போன்ற தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கும் வாய்க்க மாட்டார்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்த தொண்டர்களை போல வேறு எந்தக் கட்சிக்கும் கிடைக்க மாட்டார்கள்.
தாய்த்தமிழகம் தழைக்க வேண்டும்; தாய்த் தமிழகத்தின் நதி ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்; காவிரிப் பிரச்சினையில் மீட்சி வேண்டும் என்பதற்காக, நாம் களம் கண்டு போராடி இருக்கின்றோம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி என, இன்று பல கட்சிகள் புதிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்றால், இதற்கெல்லாம் முன்னோடி நாம்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, இருபது ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 1997 ஆம் ஆண்டிலேயே சுற்றுச்சூழலைப் பாதுகாப் பதற்காக, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்துப் போராடத் தொடங்கியவர்கள் நாம். அந்தப் போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கின்றோம். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க விடாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொடுத்து இருக்கின்றோம்.
நியூட்ரினோ திட்டம் என்று சொல்லிக் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையையைக் குடைந்து, இலட்சக்கணக்கான டன் எடையுள்ள பாறைகளை வெட்டி எடுக்க முனைந்தபோது, அதை எதிர்த்துப் போராடினோம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்று இருக்கின்றோம். மீத்தேன், ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டி, பெட்ரோலிய மண்டலமாக ஆக்க முயன்றதை எதிர்த்துப் போராடினோம்.
ஏழு பேர் விடுதலை பற்றி இன்றைக்கு எல்லோரும் பேசுகின்றார்கள். அவர்களுடைய விடுதலைக்காக, 78 இலட்சம் ரூபாய் செலவு செய்த கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதுவும், இன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்ததுபோல, அன்றைக்கு நீங்கள் திரட்டிக்கொடுத்த நிதியைத்தான் செலவிட்டு, தூக்குக்கயிறில் இருந்து அவர்களைக் காப்பாற்றி இருக்கின்றோம்.
இந்தியாவின் புகழ்பெற்ற வக்கில் ராம்ஜெத்மலானியை அழைத்துக் கொண்டு வந்து வாதாடச் செய்து, தூக்குக் கயிற்றின் முடிச்சை அவிழ்த்தோம். இல்லை என்றால், அவர்கள் எப்போதோ தூக்கில் இடப்பட்டு இருப்பார்கள்.
அதன்பிறகு, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் ஆஜராவதற்காக, நானும், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், எண்ணற்ற முறை தில்லிக்குச் சென்று விசாரணையில் பங்கேற்றோம்.
இப்படி அந்த ஏழு பேர்களுடைய விடுதலைக்காக எவ்வளவு பாடுபட்டு முடியுமோ, அவ்வளவு பாடுபட்டு இருக்கின்றோம். இன்றைக்கு எல்லோரும் அதைப்பற்றிப் பேசுகின்றார்கள்; மக்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும்; இவர்களிடம் காசு கிடையாது என்பதுவும் தெரியும்.
நெஞ்சில் மாசு அற்றவர்கள்; இவர்கள் இந்த நாட்டுக்காக உழைக்கின்றார்கள் என்பதனால், நீங்கள் கேட்டால் கொடுக்கின்றார்கள்.
ஒரு தொகுதிக்கு இருபது கோடி செலவிடப் போகின்றார்கள். அவர்களோடு நம்மால் போட்டி போட முடியுமா? முடியாது. நம்மிடம் நிதி இல்லை. ஆகக்கூடுதலாக ஒரு தொகுதிக்கு 30 இலட்சம் கூடச் செலவிட முடியாது.
ஆனால், நம்மால் போராட முடியும்; அப்படிப் போராடி வென்று இருக்கின்றோம். இப்போது எத்தனையோ புதிய கட்சிகள் முளைத்து இருக்கின்றன. அதற்குப் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன; செய்திகள் வருகின்றன.
கடந்த 27 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்ற நமக்கு, ஒரு நம்பிக்கை இருக்கின்றது. நிலைமை இப்படியே நீடிக்காது; உறுதியாக மாறும். மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, கழகத்தின் பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து இருக்கின்றேன். சில முக்கியமான முடிவுகள் எடுக்கவும் தீர்மானித்து இருக்கின்றேன். சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானித்து இருக்கின்றேன். அடுத்த ஆண்டிலேயே நிலைமை மாறும் என பேசினார்.
இக்கூட்டத்தில், புதூர் பூமிநாதன், மார்நாடு, பாஸ்கர சேதுபதி, மகபூப் ஜான், அழகு சுந்தரம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.