• vilasalnews@gmail.com

திமுக கூட்டணியில் கல்லெறிகிறதா சிபிஎம்... அதற்கு தூபம் போடுகிறதா காங்கிரஸ்!

  • Share on

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி இல்லாமல் திமுகவும் அதிமுகவும் ஜெயிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். ஆனால், அதற்கு கூட்டணியில் தான் பங்கு, ஆட்சியில் கிடையாது என அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என தன் பங்குக்கும்  கல்லெறிந்துள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வ பெருந்தகை. இதனால், திமுக கூட்டணியில் லேசாக புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசி திமுக புருவத்தை சற்று உயர்த்த செய்தார். ஆனால், அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று திமுக நினைத்து முடிப்பதற்குள்ளாகவே, 


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என விஜய் பேசியது அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்குள்ளே சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் இந்த ஆட்சி அதிகாரத்தில் பங்கு விவகாரம் தமிழக அரசியலில் பேசு பொருளாகவும் மாறியது.


சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு விழாவின் போது மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  பங்கேற்று, பின் செய்தியாளர்களை சந்தித்த போது,


தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது இயலாத காரியம். புதிதாக வந்துள்ள சில கட்சிகள், நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்கிறார்கள். அவர்களுடன் யார் கூட்டணி சேர போகிறார்கள். அப்படியே சேர்ந்தாலும் அவர்கள் என்ன வெற்றி பெறவா போகிறார்கள்? வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு வழங்க போகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 


எங்களைப் பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அதாவது, அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் போது, அத்திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய எதிர்பார்க்கிறோம் என்றார்


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பேசிய திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக - அதிமுக கூட்டணியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கூட்டணி என்பது திமுகவை பொறுத்தவரையில் ஒரே கருத்துடைய இயக்கங்கள் காங்கிரஸ், சிபிஎம், சிறுபான்மை இயக்கம், முஸ்லிம் லீக் தொடர்ந்து 1967ல் இருந்து கூட்டணியில் உள்ளனர். இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது என முடித்தார்.


இந்த நிலையில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் செல்வப் பெருந்தகை,


2006 ல் திமுக வெற்றி பெற்றாலும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு வழங்கியது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. தனித்து நின்று தனி மெஜாரிட்டியை பெற்று ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்றால் அது கேள்விக்குறி தான். யாரும் இங்கு தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல் தான் இருக்கிறது என பேசி இருக்கிறார்.


இப்படியான சூழலில், திமுகவில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் என பலரும் ஆட்சியில் பங்கு என்ற முனுமுனுப்பை அசைப்போட தொடங்கியுள்ளனர். இது போன்ற பேச்சை திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பேசினால் நிச்சயம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆட்சியில் பங்கு கோஷம் எல்லாம் தேர்தலில் சீட் எண்ணிக்கையை அதிகப்படுத்த கையாளக்கூடிய யுக்தியே தவிர, திமுக கூட்டணியில் இருந்து இந்த கட்சிகள் ஒரு போதும் வெளியேறவும் மாட்டார்கள். தமிழகத்தில் ஆட்சியில் பங்கிற்கான சாத்தியக்கூறுகளும் கிடையாது என்கின்றனர் அனுபவம் வாய்ந்த அரசியல் நோக்கர்கள்.

  • Share on

மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி.. திடீர் பரபரப்பு!

தூத்துக்குடி சிவன் கோவில் நிலத்தில் விதிமுறைகளை மீறி வணிகவளாகம் கட்டிய விவகாரம் : கோவையில் ஹெச் ராஜா பரபரப்பு பேச்சு!

  • Share on