• vilasalnews@gmail.com

மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவினரிடையே அடிதடி.. திடீர் பரபரப்பு!

  • Share on

திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக களஆய்வுக் குழு கூட்டத்திலும் இரு பிரிவினர் இடையே அடிதடி ஏற்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவில் கட்சி அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து, நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்து கருத்துகளை வழங்க கள ஆய்வுக் குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் வாரியாக சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் தான், மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் இன்று அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மதுரையில் உள்ள மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டு அடிதடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ மற்றும் செம்மலை ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மேடைக்கு வந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பகுதிக் கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவரை சமாதானம் செய்ய வந்த அதிமுக நிர்வாகிகளுடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அவர்களை அந்த நபர் தள்ளி விட்டதால் கூட்டத்தின் மேடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.


இதனால், கடும் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தரப்பினருக்கும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். செல்லூர் ராஜூ, டாக்டர் சரவணன் இடையே பனிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் தங்கள் கையே மதுரை அதிமுகவில் ஓங்கி இருக்க வேண்டும் என நினைப்பதாலே இந்த மோதல் நடந்து வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

  • Share on

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு!

திமுக கூட்டணியில் கல்லெறிகிறதா சிபிஎம்... அதற்கு தூபம் போடுகிறதா காங்கிரஸ்!

  • Share on