பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
பாஜகவும் அதிமுகவும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நெருக்கமாக இருந்து வந்தது. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து சந்தித்தது. எனினும், அறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சை காரணம் காட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு அதிமுக வெளியேறியது. அதன்பிறகு இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பாஜகவை அதுவரை விமர்சிக்காத எடப்பாடி பழனிசாமி, தற்போது நேரடியாகவே விமர்சனம் செய்து வருகிறார். அத்துடன், தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல தரப்பினர் முயற்சிகள் செய்தும் பாஜக - அதிமுக கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளும் தனித் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த போதிலும் படுதோல்வியை சந்தித்தன. தற்போது பாஜக மற்றும் அதிமுக பரஸ்பரம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில் தான், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், உங்கள் கூட்டணிக்கு பாஜகவையும் பாமகவை வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “கதவை திறந்து வைப்பது, மூடி வைப்பது என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அதிமுகவை பொறுத்த வரையில் ஒத்த கருத்துகளுடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து லஞ்ச லாவண்யம் நிறைந்த அரசை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எண்ணம்.
எங்களுடைய கட்சியின் கொள்கை அடிப்படையில் யார் விருப்பப்பட்டு சேருகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் வருகிறது. அரசியல் சூழல்களுக்கு தக்கவாறு தான் கூட்டணி வைக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பது முடிவாகும். அதற்கு முன்பு எது சொன்னாலும் அவையெல்லாம் தேர்தல் வரை நிற்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சு அரசியல் நோர்கர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அதாவது வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும். அதற்கான தேர்தல் வியூகத்தில் ஒன்றாக திமுக கூட்டணியை வலு இழக்கச்செய்வதும், அதிமுக கூட்டணியை வலுப்பெறச் செய்வதும் முக்கியமாகும். ஆகவே தான் அதிமுக கூட்டணி பலத்தில் எவ்வித சேதாரமும் வரக்கூடாது என்பதற்காக கவனமாக எடப்பாடி பழனிச்சாமி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் என்பதன் வெளிப்பாடாகவே, பாஜக அதிமுக கூட்டணிக்குள் வர வாய்ப்பு உள்ளதை சூசகமாக தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என அரசியல் பார்வையாளர்களால் கனிக்கப்படுகிறது.