நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை கலாய்ப்பது போல பேசிய சீமான், தான் அரசியலுக்கு வந்த பின்னர் தான் சேர, சோழ, பாண்டியர், வேலு நாச்சியார், வீரன் சுந்தரலிங்கம், முத்தரையர், அழகுமுத்துக்கோன் எல்லாம் மக்களுக்குத் தெரியும் என்றும் தவெக மாநாட்டில் வைக்கப்பட்ட வேலுநாச்சியார் படமே தான் வரைந்தது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், உண்மையில் விஜய் மாநாட்டில் வைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் படம் 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஐந்து ரூபாய் அஞ்சல் தலையில் இடம்பெற்றுள்ள உருவப்படம் என்றும், வேலு நாச்சியாரின் அஞ்சல் தலை வெளியிட்ட போது, சீமான் கட்சி ஏதும் தொடங்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர்.
அதேபோல கட்அவுட் வைத்தாயே தம்பி, உனக்கு வேலு நாச்சியார் வரலாறு தெரியுமா என்று விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பிய சீமான், கணவர் உயிரற்ற உடல் மீது சத்தியம் செய்து கொண்டு, தனது குழந்தையை உப்பு மூட்டை போல முதுகில் கட்டிக்கொண்டு இழந்த நிலத்தை நான் மீட்டே தீருவேன் என உறுதி எடுத்துச் சென்று வெள்ளையனை வென்று முடித்த வரலாறு தாய் வேலு நாச்சியார் உடையது என ஆவேசமாக பேசினார் சீமான்.
ஆனால், வேலு நாச்சியாரின் வரலாறு என்று ஜான்சி ரானின் வரலாறை தவறாக கூறிவிட்டார். பாவம் சீமான் கொஞ்சம் குழம்பி விட்டார் என அவரை கிண்டல் அடிக்கின்றனர் நெட்டிசன்கள்.
மேலும், வேலு நாச்சியார் தனது கணவர் இறந்து எட்டு ஆண்டுகள் கழித்துதான் வெள்ளையருடன் போர் புரிந்தார் என்றும், தமிழ், உருது, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் திறமை வாய்ந்த வேலு நாச்சியார், ஹைதர் அலியின் படையை துணைக்கு வைத்துக்கொண்டு, வீரரத்தாய் குயிலியின் தியாகத்தாலும் தனது சமஸ்தானத்தை வென்றார் என்பதே வரலாறு என்கின்றனர்.
அதேபோல, சுந்தரலிங்கம், அழகுமுத்துக்கோன் எல்லாம் தன்னால் தான் தமிழக மக்களுக்கு தெரியும் என சொல்கிறார் சீமான்.
ஆனால், 1996 ஆம் ஆண்டிலேயே வீரன் அழகுமுத்துக்கோனுக்கு எழும்பூரில் சிலை அமைத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. மேலும், 1997 ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்து கழகத்திற்கு சூட்டியவர் கலைஞர் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.
விஜய் மாநாட்டிற்கு முன்பு வரை, விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும். அவர் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் எனக் கூறிய சீமான் தான், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயயை மிக கடுமையாக விமர்சித்தார். இது ஒரு புறம் இருக்க விஜய்யை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா? என தெரியாமல் சீமான் குழம்பிட்டார். வழக்கம் போல அவர் உருட்டு வித்தைகளை காட்டிவிட்டார் என தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் சீமானை கிண்டல் அடிக்க தொடங்கிவிட்டனர்.