விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், மாவட்டம் முதல் கிளை வரை நிர்வாகிகளை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளதக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். அதில், தனது கட்சியின் கொள்கைகள், தான் பயணிக்க போகும் அரசியல் பாதை உள்ளிட்டவற்றை பேசினார்.
தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதுதான், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மாநில அரசை விஜய் ஆவேசமாக விமர்சித்து பேசினார். இந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றன.
வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில், விஜய் வியூகங்களை அமைத்து வருகிறாறாராம். கட்சியின் கட்டமைப்பை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த திட்டமிட்டு இருக்கும் விஜய், தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டு பணிக்காக பல்வேறு அணிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகளை சிறப்பாக நடத்தி முடித்தவர்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் வழங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறாராம்.
மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை செயலாளர்கள் வரை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளாரார். நிர்வாகிகள் நியமனம் செய்த பிறகு வரும் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இரண்டு நாளில் பொதுக்கூட்டம், நல உதவிகள் நிகழ்ச்சி, மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். விஜய் சுற்றுப்பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகன ஒன்றும் ரெடியாகி வருகிறதாம். மேலும், விக்கிரவாண்டியை போல நெல்லையில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதால், தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது, விஜய் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம் முடிந்ததும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிடுள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டல வாரியாக பல்வேறு கட்டங்களாக இந்த சுற்றுப்பயணம் அமைகிறதாம்.