அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நால்வர் அணியில் ஒருவராகவும் விளங்கியவர் வைத்திலிங்கம். 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியைத் தழுவினாலும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரும் அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்தபோது துணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முக்கிய பொறுப்பும் வைத்திலிங்கம் பெற்றார். ஆனால், தஞ்சை மாவட்ட அரசியலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்களின் தலையீடு இருந்ததால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக செயல்பட்டதால் வைத்திலிங்கமும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஓபிஎஸ் தரப்பு அதிமுக பெயர், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருகிறது. தற்போது மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் மீண்டும் அணிகள் இணைப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக கட்சியானது, தமிழகத்தை மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மை தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அதற்காக அணிகள் இணைய உள்ள சூழலில் யார் மீதும் குறை சொல்ல விரும்பவில்லை.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக அணிகள் இணையும் என்று சொல்லியிருந்தேன். ஆனால், இப்போது சொல்கிறேன். 2025 பிப்ரவரி மாதத்திற்குள் அணிகள் இணையும். அதிமுக வலிமை பெற்று 2026 ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “நாங்கள் அதிமுகவின் உரிமை மீட்புக் குழுவாக செயல்பட்டு வருகிறோம். தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அந்த விதியை சர்வாதிகாரத்தனமாக மாற்றியுள்ளனர். நான் பேசுவது இணைப்புக்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் கருத்துக்களை கூறவில்லை என்றார். மேலும், என்னைவிட அதிமுக குறித்து பேச வேறு யாருக்கும் தகுதியில்லை” என்றும் கூறினார்.