மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க முதலமைச்சர் உதவி மையம் என்ற திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க இலவச எண்ணான "1100" என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக பிரச்சனைகள் தீர்க்கப்படும் என முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாம் ஒரு விவசாயி என்ற முறையிலேயே பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு மக்களை சந்திக்கும் கட்சி அதிமுக என்றும் முதலமைச்சர் கூறினார்.
பின்னர், திருவேற்காடு சென்ற முதலமைச்சர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க முதலமைச்சர் உதவி மையம் என்ற திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் வீட்டிலிருந்தபடியே 1100 என்ற இலவச எண்ணில் அழைத்தால் உடனடியாக பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
1974 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதே காங்கிரஸ் கோட்டையாக இருந்த தன்னுடைய ஊரான சிலுவம்பாளையத்தில் தாம் அதிமுக கொடியை ஏற்றியவன் என்றும் அன்றிலிருந்து இன்று வரை 46 ஆண்டுகாலம் அதிமுகவின் உண்மை தொண்டனாக, விசுவாசியாக இருக்கிறேன் என்றும் முதலமைச்சர் கூறினார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர், கண்களை இமைகள் காப்பதுபோல் விவசாயிகளை அதிமுக அரசு காத்து வருகிறது என்றார். நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டிக் கொடுத்து, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.