• vilasalnews@gmail.com

காய் நகர்த்தும் ஆர்.பி.உதயகுமார் - காட்டத்தில் கே.டி.ஆர்!

  • Share on

விருதுநகரில்  விலாங்கு மீன் வேலை காட்டி, இரண்டாம் காயை வெட்ட குறி வைத்து, காய் நகர்த்துகிறார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் என உட்கட்சி விவகாரத்தில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

இரட்டை போக்கு காட்டுபவர்களை நாம் " பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல" என கூறுவோம். அதன் பொருள் விலாங்கு மீனின் தலை மீனை போலவும், வால் பாம்பை போலவும் இருக்கும். மீனை காணும் போது தலையை காட்டி நான் உன் ஜாதி என கூறிவிட்டு, பாம்பு வந்தால் வாலை அதனிடம் காட்டி நான் உன் ஜாதி என சொல்லுமாம்.

இப்படியாக ஒரு கற்பனை கதை. அதை வைத்துதான் அந்த வார்த்தை பேச்சு வழக்கில் வந்தது. ஆனால் அதனை தற்போது உண்மையாக்கி வருகிறார் அம்மா கோவில் புகழ் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.


2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஆட்சியைப் பறிகொடுத்து அ.தி.மு.க சோர்ந்திருந்த சமயம் அது. அப்போது கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்போது விருதுநகர் 'மா.செ’-வாக இருந்த காரியாபட்டி சிவசாமிக்கும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் மற்றும் திருத்தங்கல் நகராட்சித் துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் (இன்றைய பால் வளத்துறை  அமைச்சர்) இடையிலான உரசல்களில் பொறிகள் பறந்தன.

எனவே, அங்கு சமரசத்தை நிலைநாட்ட, சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ் சிபாரிசில் உதயகுமாரை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார் ஜெயலலிதா. ஆனால், சிக்கலைத் தீர்க்க நியமிக்கப்பட்ட உதயகுமார், சிவசாமிக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே எந்தச் சமாதானத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்காக முயற்சிக்கக்கூட இல்லை.

காரணம், அந்தக் கோஷ்டி மோதலில் இருவரில் ஒருவர் செல்வாக்கு இழந்தால், அந்த இடத்தை தான் நிரப்பிக் கொள்ளலாம் என்ற 'தொலை நோக்குப் பார்வை’யே!

மதுரை அரசியலைச் சமாளித்து அங்கு எம்.எல்.ஏ ஸீட் வாங்குவது கஷ்டம். ஆனால், கொஞ்சம் இறங்கி வேலைபார்த்தால், அது விருதுநகரில் சாத்தியப்படும். அதைச் சாத்தியமாக்க விருதுநகரில் கோலோச்சும் சிவசாமி, ராஜேந்திர பாலாஜி ஆகிய இரண்டு காய்களில் ஒன்றை வெட்ட வேண்டும் என்பதுதான் உதயகுமாரின் கணக்கு.

அந்தக் கணக்கும் கைகூடியது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிவசாமியை திருச்சுழி நம்பிக்கையில் திருப்பிவிட்டுவிட்டு, வெங்கடேஷின் தயவில் சாத்தூர் எம்.எல்.ஏ ஸீட் வாங்கி ஜெயித்தார் உதயகுமார். அதே வெங்கடேஷ் சிபாரிசில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் ஆனார்.

அதிமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலேயே சிவசாமியிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சராக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி சதுரங்க வியூகம் வகுத்து கோட்டைக்குள் கால் வைத்தார் உதயகுமார். 

தற்போது பல கட்ட பல்டிகளுக்கு பிறகு முப்பெரும் துறை அமைச்சராக உள்ள அமைச்சர் உதயகுமார் விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் மூக்கை நுழைத்து ராஜவர்மனை தமது ஆதரவாளராக மாற்றி மீண்டும் எடப்பாடியிடம் பேசி சாத்தூர் தொகுதிக்கு சீட் பெற்று தருவதாக கூறி ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்து வருகிறார் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்மா கோவில் திறப்பு விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் இதே சித்து விளையாட்டு காண்பிக்க நினைத்த அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக செல்லூர் ராஜுவும், ராஜன் செல்லப்பாவும் கரம் கோர்த்து அதிர்ச்சி ஏற்படுத்தி விட்டனர். எனவே உதயகுமாருக்கு வேறு வழியின்றி விருதுநகரில் இரண்டாம் காயை வெட்ட குறி வைக்கிறார் .

மதுரை ஜா.ராஜா

  • Share on

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி - அனுமதி கோரி காவல்துறையிடம் மனு

முதலமைச்சர் உதவி மையம் என்ற திட்டம் ஒரு வாரத்தில் தொடக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

  • Share on