பெங்களூருவில் தங்கி உள்ள சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ள நிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே கொரோனாவிலிருந்து மீண்ட அவர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிலாவை வரவேற்க அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாக ஒன்று கூட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். சசிகலா விடுதலையான நாளில் இருந்தே பல மாவட்டங்களிலும் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவானவர்களை ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.
தினசரியும் சசிகலாவுக்கு ஆதரவாக அதிருப்தி அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி வரும் நிலையில் , மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆலோசனை செய்கின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சசிகலா தமிழகம் வந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுகவை மீட்டெடுப்பார் என்று தினகரன் கூறி வருகிறார். சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாரா? அப்படி வரும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. அது தவிர சட்டசபைத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.