• vilasalnews@gmail.com

எடப்பாடிக்கு செக் வைக்கும் ஓபிஎஸ்... தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி!

  • Share on



கொடநாடு வழக்கு தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

கடலூர் மாநகரத்தைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் பத்மநாதனை நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதே போல் சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி திருவட்டார் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் உஷாராணியின் கணவர் ஜாக்சனும் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாளில் 3 அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்:-

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மர்ம மரணங்கள் குறித்த வழக்குகள் 90 நாட்களில் முடிக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வழங்கினார். ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று இத்துடன் 1,190 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மகா சீரியல் தொடர் போல நீண்டு கொண்டே செல்கிறது.

பல வழக்குகளில் இதே நிலைமைதான் நீடிக்கிறது. திமுக அரசின் இதுபோன்ற நடவடிக்கையும், பல்வேறு குற்றச் செயல்களில் திமுகவினரே ஈடுபடுவதும்தான் தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு காரணங்களாக அமைந்துள்ளது என்று விமர்சித்துள்ளார்

நாள்தோறும் கொலைகள் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன என்றும், சிவகங்கையில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உதவிப் பொறியாளரை நாற்காலியை தூக்கி அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

அரசு ஊழியர்களை, காவல் துறையினரை மிரட்டுவது, மக்களை மிரட்டுவது என திமுகவினரே வன்முறையில் ஈடுபடுவதும், பல சமூக விரோதச் செயல்களுக்கு திமுகவினரே உடந்தையாக இருப்பதும்தான் குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகத் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுபோன்ற செயலால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிவில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

எனவே, கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சும் நிலையை ஏற்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை முன்வைத்தும் அறிக்கையில் கூறியிருப்பது எடப்பாடிக்கு ஓபிஎஸ் வைக்கும் செக் என்று அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

  • Share on

தயாநிதி மாறனை உடனே கைது பண்ணி உள்ளே போடுங்க சார்.. எம்.பி பதவியை பறிங்க : பொங்கிஎழும் தமிழக பாஜக!

அதிமுக இணைப்புக்கு நாள் குறிப்பு : தேதியை அறிவித்த வைத்திலிங்கம்!

  • Share on