• vilasalnews@gmail.com

திமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை..காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறல் - செல்வப் பெருந்தகை பரபரப்பு பேச்சு!

  • Share on

திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை என ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறுகின்றனர். எனவே நமக்கு சுயமரியாதை கிடைக்க வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியாக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடம் பெற்றிருந்தன. மக்களவை தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்து பேசி வருகிறார். இதனை டெல்லி மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும் செல்வப் பெருந்தகை தமது பேச்சின் சாராம்சத்தை நியாயப்படுத்தி வருகிறார்.


சமீபத்தில் கூட, நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது. நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்? தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது. கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில், கூட்டணி குறித்து டெல்லி மேலிடம்தான் முடிவெடுக்கும் என பதிலடி தந்திருந்தார்.


2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றி அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைக்க ஒருதரப்பு முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் செல்வப் பெருந்தகையின் பேச்சுகளை திமுக தலைமையும் ரசிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே செல்வப் பெருந்தகை பேசுகையில், தமிழ்நாட்டின் 85% மாவட்டங்களுக்கு பயணம் செய்துவிட்டோம். 2 வது கட்டமாக பயணம் மேற்கொண்டிருக்கிறோம். எந்த பகுதிக்குச் சென்றாலும் கூட்டணியில் உரிய மரியாதை இல்லை என நகர,  வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறுகின்றனர். நமக்கு சுயமரியாதை கிடைக்க வேண்டும் எனில் நம்மை நாம் வலுப்படுத்த வேண்டும். நமது கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என  பேசியிருப்பது தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழுவில் இப்படித்தான் பேச வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளது. கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில்தான் பேசினோம். இன்றைக்கு 9 சீட் கொடுத்துள்ளனர். நமது வாக்கு வங்கியும் கட்டமைப்பும் வலிமையாக இருந்தால்தான் 20 சீட் கொடுப்பார்கள் என்பதற்காக தான் அப்படிப் பேசியதாகவும் செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

  • Share on

குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவரை வாழும் மகாத்மா என அழைக்கவா? செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை கேள்வி!

தயாநிதி மாறனை உடனே கைது பண்ணி உள்ளே போடுங்க சார்.. எம்.பி பதவியை பறிங்க : பொங்கிஎழும் தமிழக பாஜக!

  • Share on