தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வரும் பத்தாம் தேதி சென்னை வருகிறார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கான சட்டசபை பொதுத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:
தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் கமிஷன் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் இரண்டு நாள் பயணமாக வரும் பத்தாம் தேதி சென்னை வருகின்றனர். சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆகியோருடனும் தலைமைச் செயலர் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர் இவ்வாறு கூறினார்.
வரும் 11ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை முடித்து விட்டு அன்று மதியம் புதுச்சேரி செல்லும் சுனில் அரோரா அங்கு ஆலோசனை நடத்துகிறார் 12 ஆம் தேதி கேரளா செல்கிறார்.
மார்ச் முதல் வாரத்தில் ஐந்து மாநிலங்களுக்கும் சட்டசபை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் மே மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
சுனில் அரோரா வரும் பத்தாம் தேதி சென்னை வர உள்ள நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மதியம் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் தயாரிப்பு பணிகள் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.