அதிமுகவுடன் அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்தது. சசிகலாவால் 2017ஆம் ஆண்டு துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை, எடப்பாடி பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து கட்சியில் இருந்து நீக்கினர். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தினகரன் தொடங்கினார்.
அதன்பின், 2022 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுகிறது. அதேவேளையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா என தனித் தனி அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அத்துடன், பல இடங்களில் மூன்றாவது, நான்காவது இடத்தையே பெற முடிந்தது.
மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக அதிமுக ஒன்றுபட வேண்டும் என்கிற கோரிக்கைகள் தற்போது எழத்தொடங்கி உள்ளது. சசிகலாவும், ஓபிஎஸ்சும் இதுதொடர்பாக வெளிப்படையாக அழைப்பு விடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பிறப்பிலேயே தலைவர்கள். ஆனால், அதிமுகவில் தற்போது திணிக்கப்பட்ட தலைவர்கள் தான் உள்ளனர். பண பலம் மற்றும் அதிகார பலத்தால் அனைவரையும் கையகப்படுத்தி தலைவராக வந்தவர்கள். ஆர்.கே.நகர் தேர்தல் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் அதிமுக தோல்வியை தான் சந்தித்துள்ளது. அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்கு அளிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்பிடம் இருப்பதால், அதிமுக தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். 2019 தேர்தலில் அதிமுக பெற்ற 20 சதவிகிதம் வாக்குகளை விட இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்றதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்காததால் தோல்வியை தழுவினோம்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுகவுடன் அமமுகவை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்த டிடிவி தினகரன், “அதிமுக தவறான தலைமையிடம், சுயநல கும்பலிடம் மாட்டிக்கொண்டுள்ள நிலையில், அங்கு இணைவது குறித்து கேள்வி கேட்பதே தவறானது. அதிமுக தொண்டர்கள் நல்ல முடிவு எடுக்கும்போது, அதுபற்றி கலந்துபேசி நாங்கள் முடிவு எடுப்போம்” என்று பதிலளித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் டிடிவி தினகரன் உறுதிபட கருத்து தெரிவித்துள்ளார்.