• vilasalnews@gmail.com

அமைச்சரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த மு.க.ஸ்டாலின் : அதிரடியில் திமுக!

  • Share on

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சிப் பதவியை பறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் செஞ்சி மஸ்தான். இவர் திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அதே வேளையில், விழுப்புரம் திமுகவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பொன்முடி தரப்புக்கும், செஞ்சி மஸ்தான் தரப்புக்கும் இடையே தொடர் முட்டல் மோதல்கள் நீடித்து வந்தது. பொது வெளியிலேயே செஞ்சி மஸ்தான் மீது பொன்முடி கோபத்தை காட்டிய வீடியோக்களும் வெளியானது.

அதே வேளையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், துறை ரீதியிலான நிர்வாக விஷயங்களிலும் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருப்பதாக திமுகவினரே புகார் வாசித்து வந்தனர். இதனையடுத்து, செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீர் பல ஆண்டுகளாக வகித்து வந்த செஞ்சி நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல, மஸ்தான் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவிகளும் கடந்த ஆண்டு பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்ட கள நிலவரங்கள் தொடர்பாக பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ப.சேகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உறவினர்களின் கட்சிப் பதவியை பறித்ததன் மூலம் செஞ்சி மஸ்தானுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், செஞ்சி மஸ்தான் மீது உட்கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் தொடர்ந்து புகார் சொல்லிவந்ததின் காரணமாகவே தற்போது அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் தொடர்ந்தால் அது அவரது அமைச்சர் பதவிக்கும் பிரச்னையாக முடியலாம் என்கிறார்கள் திமுக வட்டாரங்கள்.

இதேபோல விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் பொன்முடி மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதமசிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். செஞ்சி மஸ்தான் நீக்கம் மற்றும் மகன் மாவட்டச் செயலாளராக நியமனம் ஆகியவை மூலம் விழுப்புரத்தில் பொன்முடியின் கை ஓங்கியுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் நடந்துள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • Share on

வடமாவட்ட கட்சி என்ற பெயரை பாமக-விடமிருந்து திமுக வாங்கி விடுமோ? ஆதங்கத்தில் தென்மாவட்ட நிர்வாகிகள்!

காங்கிரசில் கருப்பு ஆடு.. திமுக கூட்டணியை உடைக்க அவருக்கு அசைன்மெண்ட்டா?

  • Share on