திமுகவுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவிடம் ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே திமுகவும் மதிமுகவிற்கு 1+1 பார்முலாவிற்கு ஒகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் 6 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது.
கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாத நிர்பந்தத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மதிமுக தனது கோரிக்கையில் விடாப்படியாக இருப்பதாகவும், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி நீடித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில்தான், சென்னையில் மதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் வெற்றி பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வது எனவும் தீர்மனாம் நிறைவெற்றப்பட்டது. இதேபோல், ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் திமுகவிடம் கேட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திமுக ஒதுக்கும் தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்றும், பம்பரம் சின்னத்தில் அல்லது தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே திமுகவும் மதிமுகவிற்கு ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக - மதிமுக இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது.