கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்காக அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், திராவிட அரசியலில் மாற வேண்டியது என்ன என்பது குறித்துக் கூறிய கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
லோக்சபா தேர்தல் நமது நாட்டில் விரைவில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் முன்னாள் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறும் கருத்துகள் டிரெண்டாகி வருகிறது.
இந்த பிரசாந்த் கிஷோர் தான் கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்தவர். இவர் கடந்த காலங்களில் ஆம் ஆத்மி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களுக்கு வேலை செய்துள்ளார். இதற்கிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் திராவிட அரசியல் குறித்து சில கருத்துகளைக் கூறி இருக்கிறார்.
அந்த சந்திப்பில் அவர் பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். முதலில் நிதிஷ்குமார் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பலவீனமான சூழல் இருந்தாலும் அங்கிருந்து ஒரு ஆட்டத்தை ஆடி தனகானதைச் சாதித்துக் கொள்வார். அவர் ஒருபோதும் வலிமையான நிலையில் இருந்து ஆட்டத்தை ஆடியதே இல்லை. மேலும், நிதிஷ் குமார் இருந்தால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால் பாஜக அவரை கூட்டணிக்குள் அழைக்கவில்லை.
உண்மையைச் சொன்னால் நிதிஷ்குமார் வந்துள்ளதால் பீகாரில் பாஜக தனக்கான இடங்களை இழக்கப் போகிறது. ஏனெனில் அவர்கள் இப்போது நிதிஷ் குமாருக்கு தேவையான இடங்களை ஒதுக்க வேண்டும்.
நிதிஷ்குமார் இருப்பதால் அவர்கள் குறைவான இடங்களில் போட்டியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும் போது எதற்காக அவரை அழைத்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையாக இல்லை. அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்ற இமேஜை உருவாக்கவே பாஜக மீண்டும் நிதிஷ்குமாரை கூட்டணியில் இணைத்துள்ளது.
இந்தியா கூட்டணியை உருவாக்கியவரையே தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியைக் கொடுத்துள்ளனர். நிதிஷ்குமார் வருவதால் தங்களுக்கு இழப்பு தான் என்பது பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடமும் டேட்டா இருக்கிறது. ஆனால், அவர்கள் யுத்தத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்த போரில் தோல்வி அடைந்துள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "ஒடிசாவின் நவீன் பட்நாயக் நீண்ட காலமாக மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். எதிரிகளின் பார்வைக்கு வெளியே இருப்பது தான் அவரது பலம். உங்களை எதிரிகளுக்குத் தெரியவில்லை என்றால், உங்களைத் தாக்குவது மிகவும் கடினம். மாயாவதியைப் பொறுத்தவரை அவர் தனது அரசியல் அத்தியாயத்தின் கடைசி இடத்தில் இருக்கிறார் என்று சொல்லலாம்" என்றார்.
திராவிட அரசியலில் மாற வேண்டிய ஒன்று என்ன என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "சாதி சார்ந்த அரசியல் மாறணும். மேலும், வட இந்தியா உடன் ஒப்பிடும் போது அங்கே அரசியலில் பணம் மிக பெரிய பங்கு வகிக்கிறது. இது நமக்குக் கவலையாகவும் உள்ளது" என்றார்.
மேலும், இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு, என்னால் நம்பர் சொல்ல முடியாது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, மோடி தலைமையிலான கூட்டணிக்கு ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது என்றார்.