நாடாளுமன்ற தேர்தல் களம், களைகட்டிய நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட இருக்கும் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இடையே தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகள் விறுவிறுவென நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனிடையே எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். புதிய கூட்டணி உருவாகுமா? பழைய கூட்டணியில் பிளவு ஏற்படுமா? என்றெல்லாம் பரபரப்பு தொடர, தமிழகத்தில் ஒருவேளை திமுக - பாஜக கூட்டணி அமையுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக தொடங்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய கட்சி திமுக. ஆனால் இன்று திமுகவும் காங்கிரசும் கூட்டணி. கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸ் கட்சியும் நேர் எதிரிகள். ஆனால் இவர்கள் தமிழகத்தில் ஒரு கூட்டு பறவைகள். 2011 தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமக, விசிக ஆகிய இரு கட்சிகளும் இருந்துள்ளன.
1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து தமிழகத்தில் 30 இடங்களை கைப்பற்றினர். அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதப் பிரதமரானார்.
1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதில், ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது. பாஜக ஆட்சியை பறிகொடுத்தது.
பின்னர் மோடியா? லேடியா? என அறைகூவல் விடுத்த ஜெயலலிதா தலைமையிலான அதே அதிமுக தான், அவரது மறைவிற்கு பின்பு, ஆட்சியை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்தது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக. தற்போது அந்த கூட்டணிக்குள் முறிவு ஏற்பட்டுவிட்டது.
1999 முதல் 2003 முடிய பாஜக தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்து, மத்திய அமைச்சர்களாகவும் திமுகவினர் இருந்துள்ளனர்.
ஆக, அரசியல் கட்சிகளின் கூட்டணியை பொறுத்தவரை இங்கு யாரும் கொள்கை கூட்டணியாக விளங்குவது கிடையாது. எல்லோருமே தேர்தலுக்காக ஓட்டுக்களை மனதில் வைத்து அவரவர் லாப நோக்கத்திற்காக மட்டுமே கூட்டணி வைத்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக - திமுக கூட்டணி தமிழகத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏன் இவர்கள் கூட்டணி வைக்க கூடாது? என்று இன்று பட்டியல் போடும் வாய்கள் தான், பாஜக - திமுக கூட்டணி அமைத்தால், இதனால் தான் கூட்டணி அமைத்தார்கள் என பாஜக- திமுக கூட்டணிக்கு ஆதரவான பட்டியல் ஒன்றையும் நீட்ட தயாராக இருப்பார்கள். ஆகவே, தமிழகத்தில் பாஜக - திமுக கூட்டணி என்பது சாத்தியமற்றது என்பது இல்லை. அதே வேளையில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது ஒரு திராவிட கட்சியின் முடிவுரையில் இருந்து மட்டுமே தொடங்கும் என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.