திமுகவிற்கு சாதகமான தொகுதி என்றும், வேட்பாளர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் என வகைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதியை, திமுக கிரேடு 1 என வகைப்படுத்தி உள்ளது.
அந்த வகையில், திமுகவின் இந்த கிரேடு 1 ல், மத்திய சென்னை ( தயாநிதி மாறான் ), தூத்துக்குடி ( கனிமொழி ), தென் சென்னை ( தமிழச்சி தங்க பாண்டியன் ), ஸ்ரீபெரும்புதூர் ( டி.ஆர்.பாலு ), அரக்கோணம் ( ஜெகத் ரட்சகன் ) ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், திமுகவின் கிரேடு 1 ல் இருக்கக்கூடிய தூத்துக்குடி தொகுதி தான், தமிழகத்தில் முன்னணி தொகுதியாகவும், விஐபி தொகுதியாகும் தற்போது மாறி உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக வின் சார்பில் கனிமொழியும், அவரை எதிர்த்து அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அப்போதைய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிட்டதிலேயே விஐபி அந்தஸ்தை தொடங்கிய தூத்துக்குடி தொகுதி, தற்போது மிகப்பெரிய அளவில் தொழில் முதலீடுகளை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் 25ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை, 28ம் தேதி இந்திய பிரதமர் மோடி வருகை, இருவரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சி என அனைவரது பார்வையையும் ஈர்க்கும் மிக முக்கியமான ஊராக மாறி உள்ளது தூத்துக்குடி.
எதிர்கட்சிகள் வேட்பாளருக்கு ஆள் பிடிக்க தேடும் நிலையை உண்டாக்கி, வெற்றி முகப்பில் தமிழக முதல்வரின் சகோதரி கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் சூழலில் தான், இந்திய பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு முதல்முறையாக வருவதை பலரும் அரசியல் ரீதியாக ஆராய தொடங்கி உள்ளனர்.
மோடியின் வருகையை வழக்கமான வருகையாக பார்க்க முடியாது. தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடியின் வருகையை தேர்தல் பிரச்சாரமாகத்தான் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் வரும் 27, 28 ஆம் தேதிகளில் பிரதமர் மோடியின் தமிழக வருகையும் ஆகும்.
மேலும், தூத்துக்குடி எம்பி யாக இருக்கக்கூடிய கனிமொழி, மீண்டும் அவரே அங்கு போட்டியிடுவார் என்றும், எளிதாக மீண்டும் வெற்றியும் பெறுவார் என்ற நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை பயணத்தில் தூத்துக்குடியும் இடம் பெற்று இருப்பது, அரசியல் ரீதியான ஆய்வுக்கு வழிவகுக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.