திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முருகனின் வேலைப் பிடித்தாலும் கடவுள் அவருக்கு வரம் தர மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இரண்டு நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் நாள் பிரச்சாரத்தைத் தொடங்குமுன் இன்று புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர், சிங்காநல்லூரில் பிரச்சாரத்தைத் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் கடவுளை இழிவாகப் பேசியவர் ஆனால் ஓட்டுக்காக தற்போது கையில் வேலைப் பிடித்துள்ளார் என சாடினார்
இந்தியாவில் அமைதிப் பூங்காவாகவும், தொழில் தொடங்க உகந்ததாகவும் திகழும் மாநிலம் தமிழ்நாடு தான் எனவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதால் 332 மாணவர்கள் மருத்துவப் படிப்பும் 92 மாணவர்கள் பல்மருத்துவப் படிப்பும் படிக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.