• vilasalnews@gmail.com

2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ என்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் _ அதிமுக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

  • Share on

2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ என்று மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்றும், மருத்துவ முகாம் போலத்தான் இதுவும் என்றும் அ.தி.மு.க. அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உள்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நேற்று தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். அதற்காக நாமும் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த அளவிற்கு கேடுகெட்டத்தனமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆத்திரத்தின் உச்சியில், 4 மாதங்களில் பதவி போகப்போகிறது என்ற விரக்தியில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும், இப்போது ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதும் இருக்கும் விலைவாசி வேறுபாடுகள் உங்களுக்கு தெரியும். உதாரணமாக, இன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையில் அதிகமான செலவு செய்ய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. காரணம் விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக்கொண்டு இருக்கிறது.

இதைப்பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. மத்தியில் இருக்கும் மோடியும் கவலைப்படவில்லை. மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நிலையில் இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமையான இந்த 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

இப்பொழுது எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’குகளை தொடங்குவதாக அறிவித்து, கோடிகோடியாக விளம்பரம் கொடுத்து அவற்றை தொடங்கி வைத்தார். அது தொடங்கும் போதே நான், “நல்ல திட்டம் தான், நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்கு டாக்டர்கள் போட்டு விட்டீர்களா? செவிலியர்கள் போட்டு விட்டீர்களா? அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்து விட்டீர்களா? இதற்கு பதிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாளர்களை நியமித்தால் போதுமே” என்று கேட்டேன்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, “எதையும் எதிர்ப்பதுதான் ஸ்டாலினின் வேலை’’ என்று சொன்னார்கள். ஆனால் இப்போது நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப் போட்டிருக்கிறார். அதற்கு பணியாளர்கள் எப்படி நியமிக்கிறார்கள்? தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. அரசாங்கம் தான் நியமிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார்.

அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அரசு வழக்கறிஞர், “இது தற்காலிக கிளினிக் தான். அதனால் நியமனம் தேவையில்லை“ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். தற்காலிக ‘கிளினிக்’ என்றால் பொதுவாக மருத்துவ முகாம்கள் அமைப்போம். காலையில் வந்து மாலைக்கு முடித்து விடுவோம். அதுபோல தான் இதுவும். இவ்வாறு ‘மினி கிளினிக்’ திட்டம் என்பதாக கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதுவும் அல்ல.

தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை - சாதனைகளை செய்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அப்படி எதையும் செய்யவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, உங்களிடம் அதிகம் எடுத்துச்சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்; இல்லையென்றால் இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்காது; ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள்.

எனவே, நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க வேண்டும். ‘கமிஷன், கரப்ஷன், கலெக்சன்’ ஆட்சியாக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை தூக்கியெறிய அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

  • Share on

யானையை கொன்ற மனித மிருகங்கள் தண்டிக்கபட வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல்

சசிகலா என்ன சிங்கம்,புலி,கரடியா? அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர்

  • Share on