• vilasalnews@gmail.com

நெருக்கடியில் தேமுதிக... இறங்கி வந்த பிரேமலதா விஜயகாந்த்! காரணம் இதுதானாம்!

  • Share on

14 மக்களவை சீட்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என சமீபத்தில் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தற்போது, 14 + 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான், அது எனது கருத்தோ கட்சியின் கருத்தோ இல்லை என அந்தர் பல்டி அளித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டனர். தேமுதிகவை தங்களது கூட்டணியில் இழுக்க அதிமுக, பாஜக தீவிரமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்து 4 இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,  4 லோக்சபா மற்றும் 1 ராஜ்யசபா சீட் எனும் முடிவை நோக்கி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை. பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் கூட்டணி நிலைப்பாடு குறித்த தேமுதிகவின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி என்பது எனது கருத்தோ, கட்சியின் கருத்தோ கிடையாது. இது மாவட்ட செயலாளர்களின் கருத்து மட்டுமே. இதுவரை யாருடமும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகளில் இடம்பெறுவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.

பிரேமலதாவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கும், இறக்கத்திற்கும் காரணம் என்ன என்று அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கையில், 

பாஜக தரப்பில், 4 மக்களவை + 1 மாநிலங்களவை சீட் தர தயார், ஆனால், தாமரை சின்னத்தில் நிற்க நீங்கள் ரெடியா என தேமுதிக தரப்பிடம் கேட்கப்பட்டதாம். அதே போல், அதிமுகவோ 3 மக்களவை + 1 மாநிலங்களவை மட்டுமே முடியும், அதற்கு ஓகே என்றால் மேற்கொண்டு பேசலாம் என கட் அண்ட் ரைட்டாக தெரிவித்து விட்டார்கள். இவ்வாறு தகவல்கள் வருகின்றன.

  • Share on

பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்த அந்த 3 கட்சி தலைவர்கள்..சென்னையில் ஜேபி நட்டாவுக்கும் வரவேற்பு கொடுத்தனர் !

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி நிலவரம்... 8 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது!

  • Share on