• vilasalnews@gmail.com

பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்த அந்த 3 கட்சி தலைவர்கள்..சென்னையில் ஜேபி நட்டாவுக்கும் வரவேற்பு கொடுத்தனர் !

  • Share on

சென்னை நடைபெற்ற ‛என் மண் என் மக்கள்' யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை பிற கட்சிகளை சேர்ந்த 3 தலைவர்கள் வரவேற்றனர். இதன்மூலம் பாஜகவுடன் அவர்கள் கட்சி கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண் என் மக்கள்' யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த யாத்திரையை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு, இந்த யாத்திரை தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சென்னைக்குள் தற்போது நுழைந்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நடந்தது.

இந்த யாத்திரை மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அவரும் தமிழக பாஜகவின் அழைப்பை ஏற்று இன்று மாலையில் தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜேபி நட்டாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் முருகன், பாஜக மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதேபோல், ஜேபி நட்டாவை பிற கட்சிகளின் 3 தலைவர்களும் வரவேற்றனர்.

புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் ஜேபி நட்டாவை வரவேற்றுள்ளனர். இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்து உறுதி செய்து விட்டனர்.


ஆனால், ஜான் பாண்டியன் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் வெளிப்படையாக கருத்து கூறாமல் இருந்து வந்தார். இவர் இதற்கு முன்பு தமிழகத்தில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் அங்கம் வகித்தார். தற்போது அந்த கூட்டணி  பிளவுப்பட்டுள்ளது. இதனால் ஜான் பாண்டியன் அதிமுகவா அல்லது பாஜகவா? எந்த கட்சி பக்கம் செல்கிறார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தான் இன்று அவர் ஜேபி நட்டாவை வரவேற்றதன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அதோடு வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்று அவர் தனது மகளை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் வரும் தேர்தலில் பாஜக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளாராம். இந்த தொகுதியில் அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுகவின் எம்பியாக உள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஏசி சண்முகம் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதேபோல் ரவி பச்சமுத்துவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்று சென்னை வந்துள்ள ஜேபி நட்டாவை ஏசி சண்முகம், ரவி பச்சை முத்து, ஜான் பாண்டியன் ஆகியோர் வரவேற்றதன் மூலம் பாஜக கூட்டணியில் அவர்கள் 3 பேரின் கட்சிகளும் இடம்பெறுவது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Share on

ராஜீவ் காந்தி செய்த சின்ன தவறே.. இன்று பாஜகவின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணம்! நடந்தது என்ன?

நெருக்கடியில் தேமுதிக... இறங்கி வந்த பிரேமலதா விஜயகாந்த்! காரணம் இதுதானாம்!

  • Share on