அரசியலில் செய்யப்படும் சின்ன சின்ன தவறுகள் ஒரு கால கட்டத்தில் பெரிய தவறுகளாக மாறும் என்று கூறப்படுவது வழக்கம். அப்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி செய்த ஒரு சின்ன தவறுதான் இன்று பாஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சிக்கு காரணமாக மாறியுள்ளது.
1989 லோக்சபா தேர்தல், 2014 லோக்சபா தேர்தல் இரண்டுமே இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான தேர்தல்களாக பார்க்கப்பட்டது. ஒன்று மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை கொண்டு வந்து இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றிய விபி சிங் ஆட்சி 1989 ல் பதவி ஏற்றது.
பின் 2014 லோக்சபா தேர்தல், இந்தியாவில் காங்கிரசின் மாபெரும் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்து, பாஜகவின் பெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்த மற்றொரு தேர்தல். இதனால் இப்போது பாஜக வீழ்த்த முடியாத சக்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வரிசையாக வென்ற பாஜக, 2024 மக்களைவைத் தேர்தலிலும் வெல்லும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
அதிலும் தனி மெஜாரிட்டி பெற்று பாஜக மாபெரும் வெற்றியை மீண்டும் அடையும் என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட பாஜகவின் எழுச்சிக்கு ஆரம்ப விதை போட்டது என்னவோ 1989ல் வந்த விபி சிங் ஆட்சி என்று தான் கூற வேண்டும். அப்போது ராஜிவ் காந்தி செய்த அந்த தவறு தான் பாஜகவின் பெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.
அதாவது, 1989 லோக்சபா தேர்தல் ராஜீவ் காந்திக்கு பெரும் சோதனையாக அமைந்த தேர்தல் ஆகும். இந்திரா காந்தி மரணத்திற்கு பின் 1984ல் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி சிறப்பாக செயல்பட்டாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முக்கியமாக போஃபர்ஸ் ஊழல், பஞ்சாபில் அதிகரித்து வந்த தீவிரவாதம், இலங்கை உள்நாட்டு போரில் ராஜீவ் காந்தி தலையிட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ராஜீவ் காந்திக்கு எதிராக திரும்பியது.
1984ல் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்த வி.பி சிங்தான் 1989ல் ஜனதா தளம் கட்சி சார்பாக பிரதமர் ஆனார். 1984ல் ராஜீவின் காந்தியின் ஆட்சிக்கு மிகப்பெரிய விமர்சகராக இருந்தவர் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங். ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் நிதி அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இலாகாக்களை வைத்திருந்தார். இருப்பினும் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராகவே வி.பி சிங் விமர்சனங்களை வைத்து வந்தார்.
ராஜீவ் காந்தி மீது வி.பி சிங் வைத்த விமர்சனங்கள் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரஸ் மற்றும் மக்களவை உறுப்பினர்களில் இருந்தும் ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் ஜனதா தளம் கட்சியை உருவாக்கி காங்கிரசை எதிர்த்து அடுத்த 1989 மக்களவைத் தேர்தலிலேயே போட்டியிட்டார்.
ஒரு பக்கம் இந்துத்துவா வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்க, இன்னொரு பக்கம் மாநில கட்சிகள் காங்கிரசுக்கு எதிராக கைகோர்க்க தொடங்கிய காலம் அவை. 1989ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலித்தது.
1989 மக்களவைத் தேர்தல்தான் இந்தியாவில் கூட்டணிகளை உருவாக்கி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கிய தேர்தல். அதுவரை தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதே வலுவானதாக இருக்கும் என்று பல அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில் 1989ல் நடந்த மக்களவைத் தேர்தல்தான், பல சிறிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கலாம் என்று உணர்த்தியது.
1989 தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தனிப்பெரும் கட்சியாக வந்தும், ராஜீவ் காந்தி ஆட்சியமைக்க உரிமை கோராமல் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க வழி போட்டுக் கொடுத்தார். தனிப்பெரும் கட்சியாக இருந்தும், பெரும்பான்மை இல்லை, கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை என்பதால், ராஜீவ் காந்தி மாநில கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க வழி போட்டுக் கொடுத்தார்.
அப்போது ஜனதாதள அரசு விபி சிங் தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சிக்கு பாஜகவும் ஆதரவு கொடுத்தது. வி.பி சிங் அரசுக்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. இப்படி மத்திய ஆட்சியில் இருந்ததுதான் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்கின்றனர்.
வி.பி சிங்கின் ஜனதாதள அரசு உடன் கூட்டணி அமைத்து பாஜக மத்திய அரசு ஆட்சியில் இருந்ததுதான் பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது.
அப்போது ராஜீவ் காந்தியே கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருந்தால், விபி சிங் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார். அதோடு பாஜகவும் மத்திய கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்காது. இப்படி மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தது தான் பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது. முக்கியமாக மத்திய ஆட்சியில் இருந்த தைரியத்தில்தான் அத்வானி அப்போது ரதயாத்திரை நடத்தினார். அதுவே பாஜக வளர்ச்சிக்கு அடி போட்டது. இதனால் வி.பி சிங் அத்வானியை கைது செய்ய, அதனால் பாஜக கூட்டணியை முறிக்க, வி.பி சிங் ஆட்சி முடிவடைய அதுவே காரணமாக அமைந்தது.
1984ல் வெறும் 2 இடங்களில்தான் வென்ற பாஜக, 1989 தேர்தலில் 85 இடங்களில் வென்றது. இப்படி மத்தியில் ஆட்சியில் இருந்ததால் அடுத்த 1991 தேர்தலிலேயே, 120 இடங்களில் பாஜக வென்றது. 1989 வரை இரட்டை இலக்கத்தில் வென்ற பாஜக அதற்கு அடுத்த தேர்தலில் இருந்து 3 இலக்கத்தில் வெல்ல தொடங்கியது. ராஜீவ் செய்த தவறால் பாஜகவிற்கு எழுச்சி கிடைத்து. அடுத்த 1991ல் நடைபெற்ற தேர்தலின் போது 120 அதிக தொகுதிகளை வெல்ல முடிந்தது.
காங்கிரஸ் அல்லாத முதல் அரசு அமைய ராஜிவ்காந்தியின் கூட்டணி அரசு குறித்தான விழிப்புணர்வு இன்மையே காரணமாகியது. 2004 ஆம் ஆண்டு இதைவிட குறைவாக, அதாவது 145 சீட் ஜெயித்தும் சோனியா முயற்சியால் கூட்டணி அரசாங்கத்தை நடத்த முடிந்தது. ஆனால் அதற்குள் பாஜக வளர்ந்து விட்டது.
அப்போது மட்டும் ராஜிவ் காந்தி கொஞ்சம் யோசித்து முடிவெடுத்து இருந்தால், பாஜகவின் மாபெரும் வளர்ச்சி இப்போது சாத்தியமாகி இருக்காது!