வரும் நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவாரா? இல்லையா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் தேமுதிகவினரிடையே எழுந்துள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதோடு எம்எல்ஏவாகி தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றி கண்டவர்கள் வரிசையில் எம்ஜிஆர் -க்கு அடுத்து விஜயகாந்த் தான் என்று அப்போது பேசப்பட்டது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் விஜயகாந்த் காலமானார்.
2006 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கட்சி 8.3 சதவீத ஓட்டை பெற்றது. 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்து போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அதன்பிறகு தொடர்ந்து அந்த கட்சி சரிவை சந்தித்தது. தற்போது வரை சரிவை சந்தித்தும் வருகிறது என்பது தான் இன்றைய நிலவரமாக உள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தே தேமுதிக தேயத்தொடங்கியது என்பது தான் இன்று வாரை பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
இத்தகைய சூழலில் தான் விஜயகாந்த் மறைந்துள்ளார். விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்க தேமுதிக முடிவு செய்துள்ளது. பாஜக அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏதேனும் ஒன்றில் தேமுதிக சேர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் இன்று சென்னை தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர். 10 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ‛‛தனித்து போட்டியிட வேண்டும் என்பது தான் மாவட்ட செயலாளர்களின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் கூட்டணி அமைக்கவும் விருப்பம் தெரிவித்தனர். அதிக சீட் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும். 2014ம் ஆண்டை போலவே 14 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளோம் என்று கூறியவர், இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை'' என்றார்.
இந்த வேளையில் தேர்தலில் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்துவிட்டீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ‛‛தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது. விஜய பிரபாகரன் ஒரு தொகுதியில் நிச்சயம் போட்டியிட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நான் போட்டியிட வேண்டும். சுதீஷ் (பிரேமலதா சகோதரர்) போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் எந்த தொகுதி கிடைக்கப்போகிறது. யார் வேட்பாளர்? என்பது பற்றி நான் கூட்டணிக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பேன்'' என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில் பிரேமலதாவும் கூட அவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. ஆகவே, விஜய பிரபாகரன் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற தகவலும் வருகின்றன.
இருப்பினும் விஜயபிரபாகரன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவாரா? இல்லையா? என்பதை நாம் அறிய இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டும்.