• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் மத சிறுபான்மை கிறித்தவ மக்கள் வாக்குகள் யாருக்கு?

  • Share on

மக்களவைத் தேர்தலில் கிறித்தவ சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

கிறித்தவ மக்கள் தமிழ் நாட்டில் பாசக எதிர்ப்பு என்ற நிலையில் பல தேர்தல்களில் வாக்களித்து வருவது தெளிவாக தெரிகிறது.1998ல் அதிமுக- பாசக கூட்டணிக்கு எதிராகவும் 1999ல் திமுக பாசக அணிக்கு எதிராகவும் தொடர்ந்து கிறித்தவ மக்கள் வாக்களித்து உள்ளனர். 2004 ல் மக்களவைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய கூட்டணி அமைத்த போது அதிமுக-பாசக அணிக்கு எதிராக கிறித்தவ மக்கள் மொத்தமாக திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர் அதன் மூலம் திமுக 39 தொகுதிகளில் வென்றது. 2004ல் பாசகவுடன் கூட்டணி அமைத்ததால் ஜெயலலிதாவுக்கு 2006 பேரவை தேர்தலில் கிறித்தவ மக்கள் வாக்குகள் கிடைக்கவில்லை. 2011 பேரவைத் தேர்தல் களம் தான் ஜெயலலிதாவுக்கு கிறித்தவ மக்கள் வாக்குகள் கிடைத்தன.

2014 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் பிரிந்து நின்றதால் மோடிக்கு எதிராக கணிசமான கிறித்தவ மக்கள் வாக்குகள் கிடைத்தால் தனித்து நின்ற  அதிமுக 37 தொகுதிகள் வென்றது. 2019ல் மக்களவைத் தேர்தல் அதிமுக - பாசக கூட்டணி உருவானதால் கிறித்தவ மக்கள் வாக்குகள் ஓட்டு மொத்தமாக திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்தது இதனால் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ற ஒரு கருத்தும் கூறப்படுவது உண்டு.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாசக எதிர்ப்பு என்ற நிலையில் கிறித்தவ மக்கள் வாக்குகள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிமுக- பாசக கூட்டணியில் இருந்து விலகினாலும் கிறித்தவ மக்கள் வாக்குகள் அதிமுகவிற்கு கிடைப்பதற்கு சாத்தியகூறுகள் அதிகம் இல்லை என கிறித்தவ மக்கள் கூறுகின்றனர்.

இந்திய அளவில் மிகப் பெரிய திருச்சபைகளாக உள்ள கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சண்ய சேனன திருச்சபை, உள்ளிட்ட பிற திருச்சபைகளில் கிறித்தவ மக்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை பொறுத்தமட்டில் அதன் தமிழக ஆயர் பேரவை தான் அதிகாரம் மிக்க அமைப்பாக பார்க்கப்படுகிறது. 

கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற மக்களவைத் தேர்தலில்  மதசார்ப்பற்ற கூட்டணிக்கே வாக்களிப்போம் என திருச்சபை மக்களுக்கு வெளிப்படையாக கடிதம் மூலம் தெரிவிக்கும் நடைமுறை தற்போது வரை தொடர்கிறது என கத்தோலிக்க திருச்சபை மக்கள் கூறுகின்றனர். அது போலவே பிற பெரிய திருச்சபைகளும் செயல்படுவதாக கிறித்தவ மக்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவை பொறுத்தவரை கடந்த மாதங்களில் கோவையில் தனிப்பட்ட திருச்சபைகள் நடத்தும் ஒரு சில போதகர்கள் இணைந்து மாநாடு நடத்தி இருப்பது கிறித்தவ மக்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 12500க்கும் மேல் உள்ளன. ஒரு கிராம பஞ்சாயத்தில் 2 தனிப்பட்ட திருச்சபைகள் 5 முதல் 10 குடும்பங்களை கொண்டு போதகர்களால் நடத்தப்பட்டு வருவதாக போதகர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறும் கணக்கின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தனிப்பட்ட முறையில் 25000 க்கும் மேற்பட்ட சபைகள் போதகர்களால் நடத்தப்படுகின்றன. இதில் உள்ள போதகர்கள் அனைவரும் ஒரு தலைமையின் கீழ் இயங்கவில்லை என்பதே உண்மை.  போதகர்கள் கூட்டமைப்பு என கூறிக் கொள்ளும் பல்வேறு போதகர்கள் தலைமையில் இயக்கக்கூடிய அனைத்து கூட்டமைப்பிலும் தங்களை இணைத்து கொன்டு செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சங்பரிவார் கும்பல்களால் தனிப்பட்ட சபைகள் அதிக தாக்குதல்களுக்கும், திருவிவிலியம் எரிக்கப்படுவதும், சபை மூடப்படுவது போன்றவை இருந்து வந்துள்ளதாக போதகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய ஆட்சியில் சபைகள் மூடப்படுவது, தாக்கப்படுவது மிகவும் குறைந்துள்ளதாகவும் போதகர்கள் தெரிவிக்கின்றனர். பிரச்சனைகள் மூலம் சபைகள் மூடப்பட்டால் காவல் துறையினர் உடனடியாக சபை அனுமதி சான்றிதழை கேட்கின்றனர். தமிழ்நாட்டில் தனிப்பட்ட சபைகள் நடத்தும் போதகர்கள் அரசு அனுமதி தேவை  இன்றி வீடுகளிலேயே சபைகளை நடத்தும் போதகர்கள் 95%  அதிகம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த மாதம் சிறுபான்மை நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அவர்கள் சபை அனுமதி பெறுவது எளிதாக்கப்படும் என தெரிவித்து இருப்பது போதகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனிப்பட்ட முறையில் சபை நடத்தும் போதகர்கள் மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்கும் நிலை உருவாகி உள்ளதாக போதகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை சரி வர கிடைக்காமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது  கிறித்தவ மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய சிறுபான்மை நலத்துறைக்கு கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரை நியமிக்காமல் பொறுப்பு அமைச்சர் மூலம் நிர்வகிக்கப்படுவது போன்ற காரணங்கள் கிறித்தவ மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தற்போதைய திமுக ஆட்சியில் கிறித்தவ மக்களுக்கு பல்வேறு திட்டங்களை மாநில அரசு கொண்டு வந்துள்ளதாகவும், குறிப்பாக கிறித்தவ மகளிர் உதவும் சங்கம், திருச்சபை பணியாளர்கள் நல வாரியம் போன்ற திட்டங்கள் கிறித்தவ மக்களுக்கும், போதகர்களு க்கும் மிகவும் பயன் உள்ள திட்டம் என தெரிவிக்கின்றனர். எனவே தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தலில் பல முனைப்போட்டியை நோக்கி நகரும்  நிலையில் கிறித்தவ மக்களின் வாக்குகள் இந்த முறை முக்கிய பங்கு வகிக்கக் கூடும் என கிறித்தவ மக்கள் மற்றும் போதகர்கள் தெரிவிக்கின்றனர்.


- கட்டுரையாளர் 

செ.சா. ஜெபசிங்  

சிறுபான்மையினர் சமூக செயற்பாட்டாளர்.

  • Share on

சென்னையில் ஒருபக்கம்.. சேலத்தில் இன்னொருபக்கம்.. ஒரே நாளில் பாஜகவை சம்பவம் செய்த திமுக அதிமுக!

தேர்தலில் அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி...அதிர்வை கிளப்பிய சீமான்!

  • Share on